தமிழகத்தில் எட்டு வருஷங்களுக்கு முன்னால் தலைப்பு செய்தியில் இடம் பிடித்த ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில், சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து இன்று காலையில் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலிடம் பணியாற்றியவரின் மகள் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். 2001ல் காணாமல் போனார். அவரது சடலம் கொடைக்கானல் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில், ராஜகோபால், ஜீவஜோதி மீது ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் இருவரையும் பிரிக்க முயன்றுள்ளார். முடியாததால், சாந்தகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதனால் ராஜகோபால் தூண்டுதலால் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில், சரவணபவன் ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், பட்டுராஜன், காசி விஸ்வநாதன் ஆகிய 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தமிழ்ச்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், பாலு, ஜனார்த்தனம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் பூந்தமல்லி விரைவு நீதிமன்றம் விதித்தது.
இதை எதிர்த்து 11 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த மனுவை விசாரித்த அப்போதைய நீதிபதிகள் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் ராஜகோபால், டேனியல், கார்மேகம், காசி விஸ்வநாதன், பட்டுராஜன் ஆகியோரின் தண்டனையை அதிகரித்து ஆயுள் தண்டனையாக விதித்தனர். மற்றவர்களின் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா மற்றும் சந்தான கவுடர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஓட்டல் அதிபர் ராஜகோபால், டேனியல், கார்மேகம், காசி விஸ்வநாதன், பட்டுராஜன் ஆகியோருக்கு தண்டனை உயர்த்தி ஆயுள் தண்டனையாக அறிவிக்கப்பட்டதும், அதேபோல் மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையும் உறுதி செய்யப்படுகிறது.
ராஜகோபால் உள்ளிட்டோர் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்ய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
குற்றம்சாட்டப்பட்ட ராஜகோபால் உள்ளிட்டோர் ஜூலை 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்’ என்று பரபரப்பு உத்தரவை பிறப்பித்தனர்.