கிரிமினல் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

நடக்க இருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 17வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நடைமுறை கடந்த டிசம்பரில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முதல் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வருகிற மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் முதல் முறையாக அமலுக்கு வருகிறது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது போலீசில் வழக்கு நிலுவையில் இருந்தால் அது பற்றிய விவரங்கள், தண்டிக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல்கள் அனைத்தையும் முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்காவது விளம்பரம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை அடுத்து இந்த உத்தரவை செயல்படுத்துமாறு அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாளை முதல் ஏப்., 16ம் தேதி வரை மூன்று முறை குற்ற வழக்குகள் குறித்து வெளியிடவும், அதில் இரண்டு முறை செய்தித்தாள் மற்றும் ஒரு முறை தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்களின் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் அந்ததந்த தொகுதி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர்களின் பட்டியலில் இருப்பவர்களில், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறித்து மொத்தமான ஒரு செய்தியாகவும், சுயேட்சியாக நிற்பவர்கள் தனித்தனியாகவும் வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் சார்ந்துள்ள கட்சிகளும் வழக்குகள் குறித்து வெளியிட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் மீதான வழக்கு விவரத்தை தங்களது வலைத் தளங்களில் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை மூன்று வெவ்வேறு நாட்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்றும், வழக்குகளில் தண்டனை பெற்றிருந்தால் அந்த விவரங்களையும் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment