பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 11ஆம் தேதியன்று தொடங்கவுள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 8) பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஏழு கட்டமாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் 72,000 ரூபாய் வழங்குவது உட்படப் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 8) டெல்லியில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், நடைமுறையில் சாத்தியமுள்ள தேர்தல் அறிக்கையைத் தாங்கள் தயாரித்திருப்பதாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாஜக அரசின் ஐந்தாண்டு சாதனைகள் மற்றும் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் ஆகியன, இந்த 48 பக்க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. உறுதிமொழிப் பத்திரம் எனும் பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த சங்கல்ப் பத்ர தயாரிப்பில் ராஜ்நாத் சிங் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு ஈடுபட்டது. 75 அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

தேச நலன்: தீவிரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக்கொள்ளாத பாஜ அரசின் நிலைப்பாடு தொடரும். தீவிரவாதத்தை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். பாதுகாப்பு படையை வலுப்படுத்த, ஆயுத தளவாடங்கள் கொள்முதல் துரித கதியில் மேற்கொள்ளப்படும். உலகிலேயே மிக வலுவான ராணுவங்களில் ஒன்றாக இந்திய ராணுவம் மேம்படுத்தப்படும். வடகிழக்கில் ஊடுருவலை தடுக்க தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்படும். எல்லையில் ஸ்மார்ட் வேலிகள் அமைக்கப்படும். நாட்டின் பிறபகுதிகளிலும் படிப்படியாக தேசிய குடிமக்கள் பதிவு முறை செயல்படுத்தப்படும்.

காஷ்மீர்: ஜனசங்கம் இருந்த காலத்திலிருந்து எங்களின் நிலைப்பாடான, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை நீக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும். அரசமைப்பு சட்டத்தின் 35A பிரிவு, காஷ்மீரில் நிரந்தர குடியிருப்போர் அல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் எதிராக பாரபட்சமாக இருப்பதால் அதை நீக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த சட்டப் பிரிவு தடையாக உள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் தங்கள் இடங்களுக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு பென்ஷன்: அடுத்த 3 ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக்கப்படும். கிசான் கடன் அட்டைகள் மூலம், 1 லட்சம் வரை குறுகியகால கடனாக ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரையிலும் வட்டியில்லா கடனாக வழங்கப்படும். தற்போது 12.5 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும், சிறு, குறு விவசாயிகளின் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்களுக்கு 60 வயதுக்கு பிறகு பென்சன் வழங்கப்படும். இதேபோல, சிறு வணிகர்களுக்கும் பென்ஷன் வழங்கப்படும். கிராமப்புற மேம்பாட்டுக்காக அடுத்த 5 ஆண்டில் 25 லட்சம் கோடி செலவிடப்படும்.

  • வரி விகிதங்கள் குறைக்கப்படும். ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
  • 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும்.
  • மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆயுதங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
  • 2025ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும், 2030ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் உயர்த்தப்படும்.
  • 2030க்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி காணும்.
  • சபரிமலை உள்ளிட்ட மக்களின் நம்பிக்கை, மரபு சார்ந்த விஷயங்களில் சட்டப்பூர்வமான உரிமைகள் உறுதிபடுத்தப்படும்.
  • அடுத்த 5 ஆண்டில் நாட்டின் ஏழ்மை சதவீதம் ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரப்படும்.
  • அனைவருக்கும் சம உரிமை அளிக்கும் வகையில், பொது சிவில் சட்டமும், முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் முத்தலாக் தடை சட்டமும் கொண்டு வரப்படும்.
  • நீர் வளத்திற்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
  • அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு கொண்டு வரப்படும்.
  • ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும்.
    இவ்வாறு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் சமஸ்கிருதம்

பாஜவின் தேர்தல் அறிக்கையில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிப்பது உறுதி செய்யப்படும் என்றும், சமஸ்கிருத ஆராய்ச்சி மற்றும் பள்ளி அளவில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தலைப்பு கூட ‘சங்கல்பித் பாரத், சஷாக்த் பாரத்’ என சமஸ்கிருத்தத்திலேயே உள்ளது.

Related posts

Leave a Comment