சென்னை-சேலம் இடையிலான 8 வழி சாலை திட்டம் ரத்து! – ஐகோர்ட் தீர்ப்பு முழு விபரம்!

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்து வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 6 மாவட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது. இந்த திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட உள்ள இந்த 8 வழி சாலைக்கு காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட கோரி 5 மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். போராடிய பொதுமக்களை போலீசாரை வைத்து தாக்கி கைது செய்தனர். வயதான மூதாட்டிகளையும் கைது செய்து இழுத்துச் சென்றனர். இவர்களின் கதறல், யார் காதிலும் விழவில்லை. பொதுமக்கள் வாழ்வாதாரத்தை, சொந்த கிராமத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்து போராடினர். சொந்த ஊரிலேயே அனாதைகளாகிவிட்டோம் என்று கண்ணீர் விட்டு கோயில்கள் முன்பு சிறப்பு பூஜைகளை செய்தனர். இந்நிலையில், இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் காங்கிரஸ் வக்கீல் ஏ.பி.சூரியப்பிரகாசம், வக்கீல் வி.பாலு, 5 மாவட்ட விவசாயிகள், தர்மபுரி எம்.பி அன்புமணி உள்ளிட்டோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர். 

இந்த வழக்கு  சுமார் 6 மாதங்களாக நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்காக 6 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதித்து ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் நேற்று 117 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை வாசித்தனர். அதில் கூறியிருப்பதாவது: இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆரம்பத்திலேயே  தவறுகள் இருந்தால் அதை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்திருக்கலாம். ஆனால், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்த பிறகே வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்கள் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை முடிவடைந்த நேரத்தில் அவர்கள், அவர்களின் நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தபடலாம்.

சேலம் மேச்சேரியில் சுமார் 4000 ஏக்கரில் தொடங்கப்படவுள்ள ஜே.எஸ்.டபிள்யூ என்ற இரும்பு தொழிற்சாலைக்காகவே இந்த சாலை அமைக்கப்படுவதாகவும், கஞ்சமலையில் இருந்து உயர் ரக இரும்பு தாதுவையும், கல்வராயன் மலையிலிருந்து பாக்சைட்டையும், நாமக்கல் பகுதியில் உள்ள மலைகளிலிருந்து பிளாட்டினத்தையும் கொண்டு செல்வதற்காகவும்தான் இந்த சாலை அமைக்கப்பட உள்ளதாக ‘‘ஒரு மறைக்கப்பட்ட  திட்டம்” உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க முடியாது. இதேபோல் 26 ஆயிரம் கோடி செலவில் கேரளாவில் அமைக்கப்படவிருந்த சாலை திட்டம் அங்குள்ள பொதுமக்களின் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான ஆதாரங்களை பார்க்கும் போது விதிகளின்படி நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறவில்லை என்று தெளிவாக தெரிகிறது. இந்த திட்டத்தை எப்படியாவது செயல்படுத்திவிட வேண்டும் என்று மாநில அரசு அதிகாரிகள் அவசரம் காட்டியதும் அரசுத் தரப்பு செயல்பாடுகள் மூலம்  தெளிவாகிறது.

இந்த நில ஆர்ஜித நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த பலனும், பயனும் ஏற்படாது. எனவே, இந்த நடவடிகைகள் சட்ட விரோதமானதுதான்.  எந்த ஒரு சாலையையும் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதால் காலி நிலங்களை கையகப்படுத்த அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. அதேபோல, மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மாநில அரசு கூறி காலி நிலங்களை கையகப்படுத்த முடியாது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது இதை ஏற்க முடியாது. தேசிய நெடுஞ்சாலை சட்டமும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய சட்டமும், சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காத போது சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை தேவையில்லை என மத்திய அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் 10 ஆயிரம் கோடி பொதுமக்கள் பணம் முதலீடு செய்து சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் இந்த திட்டத்தில் அமல்படுத்தப்பட வேண்டும். ஆகவே, சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை என்ற மத்திய அரசு வாதத்தை ஏற்க முடியாது.

சென்னை- சேலம் இடையே அமைக்கப்படும் சாலை பசுமை வழிச்சாலை அல்ல. அதற்கான அறிகுறியும் இல்லை. விவசாய நிலங்கள் வழியே அமைக்கப்படும் சாலை மட்டுமே. இந்த புதிய சாலைக்கு விவசாய நிலங்கள், நீர்நிலைகள், வனப்பகுதி நிலங்கள் ஆகியவை ஆர்ஜிதம் செய்யப்பட இருந்தன. “சாலை அமைக்கும் போது தான் சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு தேவை என்று கூறுவது குதிரைக்கு முன்பு வண்டியை கட்டுவது” போல ஆகும். கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல்  குறித்து தங்கள் பதில் மனுவில் மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கவில்லை. அமைதியான வழியில் விவசாயிகளும் பொதுமக்களும் நடத்திய போராட்டங்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாரால் ஒடுக்கப்பட்டன. இந்த திட்டத்திற்காக எழுதப்படாத தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் பலப்பிரயோகம் செய்துள்ளனர். நீதிமன்றம் தலையிட்ட பிறகே இந்த நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்தன. இந்த திட்டத்தைத் அமல்படுத்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு முன்பாக  சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம். மக்கள் நல அரசு என்ற முறையில் விவசாயத்தையும், பொதுநலனையும் பாதுகாக்க வேண்டுமே தவிர, கண்களை மூடிக்கொண்டு திட்டங்களை செயல்படுத்த கூடாது. இந்த திட்டத்தை சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த அனுமதித்தால், அது அரசியல் சாசனவிதிகளை மீறிய செயலாக ஆகிவிடும்.

2017ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பாரத்மாலா திட்டத்தில் சென்னை- சேலம் திட்டம் இடம் பெறவில்லை. மாறாக, சென்னை- மதுரை திட்டம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. ஆனால் சென்னை – மதுரை திட்டத்தை கைவிட்டு விட்டு சென்னை- சேலம் திட்டம் அறிவிக்கப்பட்டது. திட்டம் மாற்றப்பட்டதற்கான எந்த காரணமும் கூறப்படவில்லை. சென்னை- சேலம் திட்டத்தை ஆய்வு செய்த ஃபீட் பேக் இன்ஃப்ரா என்ற தனியார் நிறுவனம் அளித்த அறிக்கையில் ஏராளமான தவறுகள் உள்ளன. அமெரிக்காவில் இரண்டு நெடுஞ்சாலைகள் இணைப்பதற்காக 1944 முதல் 1960 வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வளவு கால அவகாசம் இந்த திட்டத்திற்கு தேவையில்லை என்றாலும் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆய்வுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், 60 நாட்களிலேயே அந்த தனியார் நிறுவனம், திட்டம் குறித்து ஆய்வு செய்துள்ளது. அதுவும் அந்த ஆய்வு சென்னை-மதுரை சாலை திட்டத்திற்கானது. புதிய திட்டம் அறிவிக்கப்படும்போது அதுகுறித்துத்தான் ஆய்வுகளை நடத்த வேண்டும். புதிய திட்டத்தின் அமைப்பும், அதற்கான புள்ளிவிவரங்களும் முற்றிலும் வேறானதாக இருக்கும். எனவே, அந்த நிறுவனம் கொடுத்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த தனியார் நிறுவன அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. வனப்பகுதி வழியாக சாலை அமைக்கும் போது சில விலங்குகள் குறுக்கிடும். அப்போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும். இதற்கு மனிதர்களை தவிர வேறு யாரையும் குறை கூறமுடியாது.

ஏற்கனவே நீலகிரி, கொடைக்கானல் ஆகிய 2 முக்கிய மலைவாசஸ்தலங்கள் ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத கட்டிடங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சாலைக்கு அனுமதி அளித்தால் அரிய வகை பறவைகள், விலங்குகள் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. அரிய வகை மதிப்புமிக்க  மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே, இந்த சாலைக்காக 6 அல்லது 8 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு 100க்கும் மேற்பட்ட மரங்களை சட்ட விரோதமாக வெட்டியுள்ளனர். வனப்பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த சாலையின் இருபக்கமும் தடுப்பு சுவரோ, 24 மணி நேர ராணுவ பாதுகாப்போ தர முடியாது. அதனால், சட்டவிரோதமாக வனப்பகுதியில் நுழைய இந்த சாலை வழி ஏற்படுத்திவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

வன நிலங்கள், நீர்நிலைகள், வனவிலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற அத்தியாவசியமான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இதுபோன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்த கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் முன்பு சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறுவது எவ்வளவு அவசியமோ அதைபோல பொதுமக்களிடம் கருத்து கேட்பதும் அவசியம். ஆனால், விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து எதுவும் கேட்கப்படவில்லை. எனவே, 8 வழிச்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவது தொடர்பான தமிழக  அரசின் அறிவிப்பாணையை இந்த நீதிமன்றம் ரத்து ெசய்கிறது. நில உரிமையாளர்களின் நிலங்களை வருவாய் ஆவணங்களில் அரசு நிலங்களாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நில உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தை கையகப்படுத்தும் முன்பே வகை மாற்றம் செய்ய முடியாது என்பதால், அந்த வகை மாற்றத்தை திருத்தி மீண்டும் உரிமையாளர்களின் பெயருக்கு இரண்டு வாரங்களில் மாற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை 8 வாரங்களுக்குள் அமல்படுத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

fifteen + sixteen =