இந்தியாவில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டசபைகளிலும் கோடீஸ்வர எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பெருகிவிட்டார்கள். தற்போது நாடாளுமன்றத்தின் மக்களவையில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் கோடீஸ்வரர்களின் பங்கு 82 விழுக்காடு. இது, 2004இல் 36 விழுக்காடாகவும், 2009இல் 53 விழுக்காடாகவும் இருந்தது.
இது போதாதென்று, குற்றவியல் வழக்குகளைக் கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. குற்றவியல் வழக்கும் இருந்து, பெரும் செல்வந்தராகவும் இருந்தால், தேர்தலில் அவரின் வெற்றி வாய்ப்பு, அவர் போட்டியிடும் தொகுதியில் குறைந்த சொத்து மதிப்புள்ள வேட்பாளரின் வெற்றி வாய்ப்பைவிடச் சராசரியாக 50 விழுக்காடு அதிகம் என்பதை When Crime Pays: Money and Muscle in Indian Politics எனும் புத்தகத்தில் மிலன் வைஷ்ணவ் என்பவர் புள்ளிவிவரங்களோடு நிறுவியுள்ளார்.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், இந்த நூற்றாண்டில் நடந்துள்ள மூன்று பொதுத்தேர்தல்களில் கோடீஸ்வர எம்.பி.க்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்தது. இது தேசிய அளவில் நாம் பார்க்கும் போக்கோடு ஒத்துப்போகிறது. குற்றவியல் பின்னணியைக் கொண்ட தமிழக எம்.பி.க்களின் பங்கு, தேசிய சராசரியைவிடக் குறைவாக இருந்து வந்துள்ளது கொஞ்சம் ஆறுதலான செய்தி.
குற்றவாளிகள், குற்றவியல் வழக்கில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள், பெரும் செல்வந்தர்கள் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகளாகவும் அமைச்சர்களாகவும் இருந்தால், அவர்கள் யாருடைய நலனுக்காகச் சட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் வடிவமைப்பார்கள் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.