நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடிய வர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது, “இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்கு தான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக் குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, “இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, ‘இந்தப்படத்தின் இயக்குனர் தில் சத்யாவிற்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இந்த இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் ஹீரோ ஜே.கே அழகாக இருக்கிறார். ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முக திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் தரமணி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்’ என்றார்.
இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்” என்றார்