இந்த கோடையில் தகிக்கும் வெயில் தான் அனைத்து இடங்களிலும் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை தணிக்கும் வகையில் இதமான குளிர்ந்த ஒரு சாரல் மழையாக வந்திருக்கிறது இந்த செய்தி. ஆம், தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோகிரீன் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது அவர்களின் அவர்களின் அடுத்த பிரமாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பு தான். கே
.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 20’ STR, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. KGF இயக்குனர் பிரஷாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணி புரிந்த நர்த்தன் இந்த படத்தை இயக்குகிறார். தனித்துவமான கதைகளை வணிக அம்சங்களை கலந்து மிகச்சிறப்பாக கொடுக்கும் ஒரு அரிய தயாரிப்பாளர் தான் ஞானவேல் ராஜா. அதனாலேயே, இந்த படத்தில் என்னவெல்லாம் இருக்கப் போகிறது என்பதை அறியும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “இது மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஒரு ஆக்ஷன் திரில்லர். இது படத்தை மிகவும் உயர்த்தி சொல்வதாக தோன்றலாம், ஆனால் ஸ்கிரிப்ட் மற்றும் அது வைத்திருக்கும் வலுவான கதை தான் இதற்கு காரணம். இயக்குனர் நர்த்தன் கதையை விவரிக்க ஆரம்பித்தபோதே ஆரம்ப காட்சிகளிலேயே இதை மெகா பட்ஜெட் படம் என்ற பட்டியலில் சேர்க்க முடியும் அளவுக்கு இருந்தது. ஒரு சில காட்சிகளிலேயே, படத்தின் ஆக்ஷன் அம்சங்களை என்னால் தன்னிச்சையாக உணர முடிந்தது, மேலும் பார்வையாளர்களின் ரசனையை கவர இன்னும் பல காரணங்களை இந்த கதை கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. குறிப்பாக, STR போன்ற ஒரு வெகுஜன ஹீரோ அவரது முத்திரையுடன் ஈடு இணையற்ற ஒரு நடிப்பை கொடுக்கும்போது, படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கௌதம் கார்த்திக் போன்ற மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகர் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்குள் நான் இப்போதே போய் விட்டேன். நாங்கள் முன்னணி கதாநாயகிகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவற்றை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.
இதுவரையில், நவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019 ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது, இந்த படத்தை பற்றிய பல வியக்கத்தக்க அறிவிப்புகளை தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள்.