சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள்.
சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கூடுதலாக, அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, டூப் இல்லாமலும், கயிறு இல்லாமலும் சண்டைக் காட்சிகளில் அவரே துணிந்து செய்திருக்கிறார். உயரமான ஒரு கட்டடத்திலிருந்து குதிக்கும்போது அவரது கால் முறிந்து விட்டது. ஆனாலும் அடுத்த 30 நிமிடங்களில் சக்கர நாற்காலியில் படப்பிடிப்புக்கு திரும்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டக்கலைஞர்களை வைத்து தான் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது, இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என உறுதியளிக்கலாம்.
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். சுஜீத் சாரங் (ஒளிப்பதிவு), ஜாக்ஸ் பிஜாய் (இசை) மற்றும் ஜி.ராமராவ் (படத்தொகுப்பு) ஆகியோர் டிரைலரிலேயே தங்கள் முத்திரையை பதித்து விட்டனர். படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும்.