தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு!

தமிழகத்தில் வரும் மே 19ஆம் தேதி நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தேர்தலன்று பொன்பரப்பியில் இரு தரப்புக்கு இடையே கலவரம் ஏற்பட்டதால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார். அதிக பணப்பட்டுவாடா காரணமாக மதுரை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் இரவு தேனி மாவட்டத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டதால் முறைகேடு நடந்து இருக்கலாம் என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுகுறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது.

இவ்விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 15 மக்களவைத் தொகுதிகளில் 46 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் வரும் மே 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அதிகபட்சமாக தருமபுரியில் எட்டு வாக்குச்சாவடிகளிலும், தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு மே 12ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

.

.

Related posts

Leave a Comment