மே 30ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரியுள்ளார்.

17ஆவது மக்களவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வென்றுள்ளது. 16ஆவது மக்களவைக் கலைக்கப்பட்டதாக நேற்று (மே 25) குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனிலிருந்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோடி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஷிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் படல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் மோடியை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சரவைக் குழுவில் இடம்பெறவுள்ள புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களின் பெயர்களையும், ஒதுக்கப்படும் துறைகளையும் அளிக்குமாறு மோடியிடம் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார். பதவியேற்பு விழாவுக்கான நாள் மற்றும் நேரத்தைச் சொல்லவும் கேட்டுள்ளார்.

குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, “அடுத்த சில நாட்களில் அரசாங்கம் வேகமாகச் செயல்பட ஆரம்பிக்கும். ஒரு நொடியைக் கூட நாங்கள் வீணாக்க மாட்டோம் என்று நம்புகிறோம்” என்றார். மே 30ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

Related posts

Leave a Comment