ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தனது இசை குழுவினருக்காக ‘நன்றி தெரிவிப்பு’ வீடியோ ரிலீஸ்!

‘மகரிஷி’ திரைப்படத்தின் வரலாற்று வெற்றியை தொடர்ந்து, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தனது இசை குழுவினருக்காக ஒரு ‘நன்றி தெரிவிப்பு’ வீடியோ வெளியிடுகிறார். டிஎஸ்பி, தேவி ஸ்ரீ பிரசாத், இன்றைய இளைய தலைமுறையின் இசையமைப்பாளர். பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர். அவரது ஆட வைக்கும் இசைக்காகவே ‘ராக்ஸ்டார்’ என புகழ் பெற்றவர். இந்த வருடத்தின் மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘மகரிஷி’ படத்திற்கான பங்களிப்பின் மூலம், மீண்டும் இசைத்துறையின் பேசுபொருளாக மாறி, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார்.

‘மகரிஷி’ திரையரங்குகளில் இன்றுடன் தனது வெற்றிகரமான 30வது நாளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் சூப்பர் ஸ்டார் மகேஷின் திரையுலக பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்பதோடு அவரது ‘வெள்ளி விழா’ படமும் கூட. இப்படம் ‘மகரிஷி’ மகேஷின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரமாக அமைந்ததோடு மட்டுமின்றி, அவர்கள் இப்படத்தை ரசித்த விதமும் போற்றுதலுக்குரியது. டிஎஸ்பியின் துள்ளும் இசையமைப்பும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு நல்லதொரு உறுதுணையாக இருந்தது என்பது கூடுதல் சிறப்பு. குறிப்பாக டிஎஸ்பி தனது இசையின் மூலம், ஒரு விவசாயிக்கும் ஒரு திரைப்படத்தின் கதாநாயகனுக்கும் இடையே உள்ள ஒரு கண்ணுக்கு தெரியாத தொடர்பை ஏற்படுத்துவதில், மகத்தான வெற்றி கண்டிருக்கிறார். குறிப்பாக பின்னணி இசை இப்பணியை மிகவும் செவ்வனே செய்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. இந்த உன்னதமான பிஜிஎம், இயக்குனர் வம்ஷி ராக்ஸ்டார் டிஎஸ்பியின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாக அமைகிறது.

இது குறித்து ராக்ஸ்டார் டிஎஸ்பி பேசுகையில், ‘இன்றுடன் இமாலய வெற்றி பெற்ற ‘மகரிஷி’ தனது வெற்றிகரமான 30வது நாளை திரையரங்குகளில் நிறைவு செய்கிறது. இந்த மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் பாடல்களும், பின்னணியும் இசையும் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்திரைபடத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த சூப்பர் ஸ்டார் மகேஷ், இயக்குனர் வம்ஷி, தயாரிப்பாளர்கள் தில் ராஜூ, அஸ்வினி தத், பிவிபி ஆகியோருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக சூப்பர் ஸ்டார் மகேஷ் என்மீது கொண்ட அன்பிற்கும் எனது இசையின் மீது கொண்ட நம்பிக்கைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். இந்த சந்தோஷமான வேளையில், ‘சரிலேறு நீக்கேவாறு’ என்ற தனது அடுத்த திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்ததற்கும் சூப்பர் ஸ்டாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.’

‘அருமையான இத்தருணத்தில், இந்த வெற்றி படத்திற்காக என்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், உதவியாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த காணொளியைத் தயாரித்து இருக்கிறேன். ஒரு வெற்றிப்படத்தின் பின் இருக்கும் இசையமைப்பாளர் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறார் என்பதை மாற்றும் வகையில், வெற்றிக்கு உழைத்த இவர்கள் அனைவருமே அவரவர்களுக்குரிய அடையாளங்களை பெறவேண்டும் என்பதால் இந்த சிறு முயற்சி.’ என்றார்

Related posts

Leave a Comment