காணாமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது!.

விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள், மாயமான 8 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம், ஜோர்கத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக சரக்கு விமானம் கடந்த 3ம் தேதி புறப்பட்டு சென்றது. ரஷ்யா தயாரிப்பு விமானமான இது தற்போது இந்திய விமான படையில் மிக குைறந்த எண்ணிக்கையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி விமான ஊழியர்கள் 8 பேர், ராணுவத்தை சேர்ந்த 5 பேருடன் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது விபத்தில் சிக்கியதாக கருதி, தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த தேடுதல் பணியில் விமானப்படைக்கு சொந்தமான சுகோய் -30 உள்ளிட்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இந்தோ – திபெத்  எல்லை படை மற்றும் உள்ளூர் போலீசார், இஸ்ரோவின் செயற்கைக்கோளும் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், மோசமான வானிலை, மலை முகடுகள், அடர்ந்த வனப்பகுதிகள் காரணமாக விமானத்தை தேடும் பணி தாமதமானது. தற்போது அருணாச்சல பிரதேசத்தின் லிபோ பகுதிக்கு 16 கிமீ வடக்கே மாயமான விமானத்தின் பாகங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. இந்திய விமானப்படையின் எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரின் தேடுதலில் சிதறிக் கிடந்த விமான பாகங்கள்  தெரிந்தன. அந்த விமானத்தில் சென்றவர்களின் கதி என்ன ஆனது என்ற விவரம் தெரியவில்லை. விமான பாகங்கள் உள்ள பகுதிக்கு மீட்புப்படையை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment

6 + 20 =