ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட கதை என்றால் பத்தடி தள்ளி நிற்கும் சினிமா ரசிகனை “இதையும் பார் நண்பா” என நட்போடு அழைக்கிறது கன்னிமாடம். இப்படம் பார்ப்பவர்களுக்கு சாதி வெறியர்கள் மேல் கோபம் வரும் என்பது முன் அறிவிப்பு.
சென்னையில் தஞ்சம் புகும் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக். அவர் கொடுக்கும் அடைக்கலத்தையும் மீறி அந்த ஜோடிகளுக்கு சில விபரீதங்கள் நடக்கின்றன. முடிவு என்ன என்பதே கன்னிமாடம்.
இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலே ஆணவக்கொலை என்ற மேட்டரை கையில் எடுத்துள்ள போஸ் வெங்கட்டின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். சமூகக் கருத்துள்ள படத்தைத் தயாரிக்க முன்வந்த ஹசீருக்கும் வாழ்த்துகள்.
அன்பு கேரக்டரில் வரும் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் நல்ல தேர்வு. விஷ்ணு ராமசாமியின் நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. படத்தின் முக்கிய அம்சமே நாயகியின் கேரக்டர் தான். அதை அழகாக உணர்ந்து நடித்துள்ளார் சாயாதேவி. ஆடுகளம் முருகதாஸ் படம் நெடுக உற்சாகமூட்டி இருக்கிறார். சூப்பர் குட் லட்சுமணனுக்குள் ஒரு நல்ல நடிகர் இருக்கிறார் என்பதற்கு இப்படமும் ஒரு சாட்சி. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் படத்தில் அதிரடியாக அறிமுகமாகி பின் அன்பால் கவர்கிறார்.
படத்தின் கதையோட்டமும் அதற்குத் தகுந்தாற் போன்ற மேக்கிங்கும் போஸ் வெங்கட்டை மீண்டும் பாராட்ட வைக்கிறது. இசை ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பாடல்களில் இருக்கும் இசையை விட வரிகள் மிகச்சிறப்பாக இருந்தன. எப்படிப் பார்த்தாலும் அந்தப் பெருமை இசை அமைப்பாளருக்குத் தான்.
முன்பாதியில் வெகுசில இடங்களில் படம் தடுமாறி பயணித்தாலும் பின்பாதியில் யாராலும் மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது. சாதியில்லா சமூகம் தான் சந்தோஷம் காணும் எனச் சொல்லும் கன்னிமாடம் நல்ல பாடம்