வீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில்
E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முனைந்துள்ளது.
துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து வெற்றிபெற்ற E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஏற்கெனவே ISHQ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்திருக்கிறது. தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளைத் தயாரித்து வெளியிடவிருக்கிறது.
இந்த இரு படைப்புகளும் ‘சேஸிங் தி பிரிகண்ட் ’ (Chasing the Brigand) என்ற தலைப்பில் முன்னாள் ஏஜிடிபி விஜ்யகுமார் ஐ.பி.எஸ். எழுதிய பரபரப்பான புத்தகத்தில் இருக்கும் உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து, தம்முடைய புத்தகத்தின் அடிப்படையில் திரைப்படம் தயாரிக்க அனுமதி அளித்ததற்காக, தற்போது மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். திரு. விஜயகுமார் ஜம்மு மற்றும் காஷ்மீர் கவர்னருக்கு ஆலோசகராகவும்பணிபுரிந்தவர்.
இந்தப் படைப்புகளில் பணியாற்றும் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் முகேஷ் மேதா தெரிவித்தார்.
மேலும் பல ஆண்டுகளாக அளித்துவரும் ஆதரவுக்காகப் பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதே போன்றதொரு ஆதரவை இனி வருங்காலத்திலும் அளிப்பார்கள் என நம்புவதாகவும் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா கூறினார்.