தினகரன்கோவில்பட்டிக்கு தொகுதி மாறியது ஏன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி மட்டுமல்லாமல் இன்னொரு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக நேர்காணலின் போது அறிவித்தார்.

அந்த வகையில் அவர் தேனி மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்றும், தஞ்சை மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் கட்சிக்குள் எழுந்துகொண்டிருந்தன.

இந்நிலையில்தான் நேற்று (மார்ச் 11) வெளியிடப்பட்ட அமமுகவின் இரண்டாம் கட்ட்ப் பட்டியலில் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியை தினகரன் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?

“கோவில்பட்டி தொகுதிக்குள் கோவில்பட்டி ஒன்றியம், கயத்தாறு ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்கள் இருக்கிறது. கயத்தாறு ஒன்றியத்தில் முக்காவாசி 2008 இல் மறு சீரமைப்பின் போது கோவில்பட்டி தொகுதிக்குள் வந்துவிட்டன.

கயத்தாறு ஒன்றிய சேர்மனுக்கு 16 கவுன்சிலர்கள். அதில் 10 கவுன்சிலில் அமமுகவினர் ஜெயித்துவிட்டார்கள். அதிமுக சார்பில் 2 கவுன்சிலர்கள். இந்த ஒன்றியத்தின் சேர்மனாக இருப்பவர் கடம்பூர் மாணிக்கராஜா. இந்த ஒன்றியத்துக்குட்பட்ட அமைச்சர் கடம்பூர் ராஜுவின் சொந்த ஊர் அடங்கிய வார்டில் கூட அமமுகதான் ஜெயித்தது. ஜமீன் பரம்பரையை சேந்தவரான மாணிக்கராஜாவை இளையஜமீன் என்றுதான் தினகரன் அழைப்பார். இருவரும் அவ்வளவு நெருக்கம். அண்மையில் குமரி மாவட்டத்துக்கு கிறிஸ்துமஸ் விழாவுக்கு வந்தபோது கூட அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தது மாணிக்கராஜாதான்.

கயத்தாறு ஒன்றியத்தில் இப்படியென்றால் கோவில்பட்டி ஒன்றியத்தில் பல முறை ஒன்றிய சேர்மன் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு ஒருவழியாக அதிமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறார் கடம்பூர் ராஜு.

 

இந்தத் தொகுதியில் மறவர் சமுதாய ஓட்டுகள் மட்டுமே 60 ஆயிரம் இருக்கிறது. அதையடுத்து தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளும், நாயுடு சமுதாய ஓட்டுகளும் இருக்கின்றன.

கடந்த 3 வருடங்களாகவே தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டை குறிவைத்து கடம்பூர் ராஜூ பணியாற்றி வருகிறார். இமானுவேல் சேகரனுக்கு வெண்கலச் சிலை, சுந்தரலிங்கத்துக்கு சிலை என்று அம்மக்களை கவரும் வகையில் செயல்பட்டு வந்தார்.

சமுதாயம் தாண்டி அமைச்சர் என்ற முறையில் கடம்பூர் ராஜூவுக்கு இருக்கும் பெரிய அளவிலான அதிருப்தி உள்ளிட்ட மற்ற காரணங்களைச் சொல்லி, ‘உங்களுக்கு ரொம்ப பாதுகாப்பான தொகுதி’என்று தினகரனை சம்மதிக்க வைத்து இந்தத் தொகுதியில் நிறுத்தியது மாணிக்கராஜாதான். மிகச் சரியாக கணக்கு போட்டு கோவில்பட்டியை தேர்ந்தெடுத்திருக்கிறார் தினகரன்” என்கிறார்கள்.

Related posts

Leave a Comment