சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

அதிமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடும் பட்டியலில் முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலமும் சேர்ந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக நேற்று (மார்ச் 18) மனு தாக்கல் செய்திருக்கிறார்.

பெருந்துறை தொகுதியில் 2011 தேர்தலில் வெற்றிபெற்ற தோப்பு வெங்கடாசலம் அமைச்சர் ஆக்கப்பட்டார். 2016 தேர்தலிலும் அவர் மீண்டும் வெற்றிபெற்றும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளையும் வெற்றி பெற வைத்தும் தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார் தோப்பு. 2016 ஆட்சி அமைத்ததும் கருப்பணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெ.மரணத்துக்குப் பின் அமைச்சரவையில் செங்கோட்டையனும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சேர்க்கப்பட்டார். அப்போதும் தோப்புவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு வழங்கப்படும் என்று தோப்பு காத்திருந்த நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியலில் பெருந்துறை தொகுதிக்கு தோப்பு பெயர் இல்லை.

இதனால் அதிருப்தியான தோப்பு வெங்கடாசலம், தனது ஆதரவாளர்களை அழைத்து, “என்னை கேவலப்படுத்திவிட்டார்கள்.என் ஆதரவாளர்களை இன்னாருக்குதான்வேலைசெய்ய வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த மாட்டேன்”என்று பேசினார்.

இந்த நிலையில் நேற்று பெருந்துறையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார் தோப்பு. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“நான் எம்.எல்.ஏ.வாக இருந்த 10 ஆண்டுகளில் கட்சிக்கும், மக்களுக்கும் எதிராக எந்த தவறும் செய்யவில்லை. பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை பெருந்துறை தொகுதிக்கு கொண்டு வந்திருக்கிறேன். நான் கொண்டு வந்துள்ள திட்டங்களால் பெருந்துறை எந்த அளவு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது கட்சியில் இருந்து எனக்கு போட்டியிட சீட் மறுக்கப்பட்டாலும், என் மீது அன்பு கொண்ட தொகுதி மக்கள் அவர்களாக முன்வந்து நான் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கட்சி பேதமின்றி, எதிர்க்கட்சியினர் கூட நான் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

இப்போதும் நான் அ.தி.மு.க.வில் இருக்கிறேன். எனது சட்டைப்பையில் அம்மா ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படங்கள்தான் உள்ளன. நான் கட்சிக்கு எதிராக செயல்படவோ, வேறு கட்சிக்கு ஆதரவு அளிக்கவோ, கட்சி மாறவோ இல்லை. என்னை நம்பிய பெருந்துறை தொகுதி மக்களுக்கு நான் செய்ய வேண்டிய பணி இருக்கிறது. இந்த தொகுதிக்கு யார் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும்” என்று தெரிவித்தார் தோப்பு வெங்காடசலம்.

நான் தனிமரமல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தனது ஆதரவாளர்கள் புடை சூழ வலம் வரும் தோப்பு வெங்கடாசலம் ஈரோடு மாவட்டம் முழுதும் அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார் என்கிறார்கள் ஈரோடு அரசியல் வட்டாரத்தில்.

இதேபோல நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரசேகரனும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக களமிறங்குகிறார்.

Related posts

Leave a Comment