தமிழகத்தில் இதுவரை 215 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையினரால் ரூ.215.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைமைசெயலகத்தில், நேற்று(மார்ச் 19) தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மது மகாஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை ஆணையர் கிர்லோஷ்குமார், அமலாக்கத் துறை சிறப்பு டிஜிபி கரன் சின்ஹா, காவல்துறை ஏடிஜிபி ராஜீவ்குமார், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மோகன், அமலாக்கத் துறை ஐஜி செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 18ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி ரூ.117.81 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.1.65 கோடி மதிப்பிலான வெள்ளி, ரொக்க பணமாக ரூ. 79.02 கோடி, ரூ.14.75 கோடி மதிப்புள்ள சுவர் கடிகாரம், சேலை, வேட்டி உள்ளிட்ட பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.215.28 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

மக்களுக்கு பணம் விநியோகம் செய்ய ரயில்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க ரயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு போலீசாருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ரயில்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதற்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 30 சதவிகிதத்திற்கும் மேல் விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைகளை மாவட்ட மேலாளர் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து கண்காணிப்பு அதிகாரிகள் கூறுகையில், உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 30 சதவீதத்திற்கும் மேல் விற்பனை நடைபெறும் கடைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரை, சேலம், திருச்சி மண்டலங்களில் விற்பனை அதிகமாக நடப்பதாக தகவல் வந்துள்ளது. அதிகபட்சம் ரூ.1 லட்சம் விற்பனையாகும் கடையில் ரூ.1.30 லட்சம் வரை விற்பனை நடைபெறலாம். அதிகமான விற்பனைக்கு சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும்.
மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யும் மதுபானங்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment