அரசாங்கத்தின் கொடூர முகத்தினை தோலுரிக்கும் தேன் – சிறப்பு பார்வை

பசுமை, பசுமை, பசுமை… திரும்பிய பக்கமெல்லாம் பசுமை படர்ந்த தேனி மாவட்டத்தின் மலைக் கிராமம். காதலறும்பிய இளவட்டங்கள் வேலுவும் பூங்கொடியும் கணவன் – மனைவியாக உற்றார் உறவினர் சம்மதித்தாலும் கடவுளின் உத்தரவு கிடைக்காத நிலை.
கடவுளின் முடிவை மீறினால் தம்பதிகளில் ஒருவருக்கு மரணம் நிச்சயம்’ என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். காதலர்கள் மீறுகிறார்கள்.
குறிப்பிட்ட குறைபாட்டோடு குழந்தை பிறக்க, அடுத்தடுத்தும் வளைத்துக் கட்டி வெளுத்து வாங்குகிறது சோதனைகள். அத்தனைக்கும் காரணம் மக்கள் விரோத அரசின், மனிதம் தொலைத்த அரசு ஊழியர்களின் அராஜகம். அந்த அராஜகங்களின்  தொகுப்பு அழ வைக்கும் காட்சிகளாய் விரிகிறது.
ஆதார் கார்டு, காப்பீடு அட்டை போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை விளக்கியிருப்பதெல்லாம் இயக்குநர் கணேஷ் விநாயக்கின் துணிச்சல்!
ஓங்கி உயர்ந்த மலையில் அதைவிட ஓங்கி உயர்ந்த மரங்களில் தாவி தேனெடுத்து பிழைப்பு நடத்தும் அப்பாவி இளைஞனாய் தருண்குமார். நடிப்பில் ‘மலை’க்க வைக்கிறார்.
அந்த பளீர் நிறம் சற்றே பொருந்தாவிட்டாலும் கிராமத்துப் பெண்ணுக்கான அழகை முகத்தில் பிரதிபலிக்கிறார் அபர்நதி. நடிப்புக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!
கொள்ளை அழகாய் குழந்தை நட்சத்திரம் அனுஸ்ரீ. கிளைமாக்ஸில் அந்த சிறுமியின் நடிப்பு; துடிப்பு!
பாவா லெட்சுமணன் அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை வசனங்களால் வறுத்தெடுக்கிறார். சிரிப்போடு தியேட்டரில் விசில் பறக்கிறது.
ஒன்றிரண்டு காட்சிகளேயானாலும் அழுத்தமான கேரக்டரில் அருள்தாஸ்.
ஓரிருவரைத் தவிர படத்தில் எல்லோரும் புதுமுகங்கள். நடிப்பில் அது தெரியவில்லை!
அரசு அதிகாரிகளின் திமிர்த்தனம், இண்டு இடுக்கெல்லாம் புழங்கும் லஞ்சம், அரசாங்க மருத்துவமனைகளின் அலட்சியம், இயற்கை வளங்களைச் சீரழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளையெல்லாம் நிறைய படங்களில் பார்த்தாயிற்று. இதிலும் பார்க்கிறோம்.
அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடிவது, பரிதாபத்தை சம்பாதிப்பதற்காகவே திணிக்கப்பட்டது போன்ற காட்சிகள் பலவீனம்.
மலையின் அழகை, பசுமையின் எழிலை பாந்தமாய் பந்தி வைக்கும் ஒளிப்பதிவை பாராட்டிக் கொண்டே இருக்கலாம்! பாடல்கள் இதம்.
நிறைவாய் ஒன்று… அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கு தீரும்வரை இப்படியான படங்களின் வருகையைத் தவிர்க்க முடியாது. வருவதை வரவேற்போம்!

Related posts

Leave a Comment