பழனி புதியமாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிச்சாமி வாக்குறுதி

பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திறந்த வேனில் முதல்வர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, “ஸ்ரீரங்கம் கோயில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் ஆகிய இடங்களில், திருநீறு கொடுத்தபோது அதைக் கீழே கொட்டி மக்களின் கடவுள் நம்பிக்கையை அவமதித்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். இவ்வாறு மதங்களை அவமதித்து வந்த ஸ்டாலின் தற்போது வேலை கையில் எடுத்திருக்கிறார். இதுதான் பழனி முருகனின் சக்தி.

தமிழகத்தின் சிறந்த புண்ணியத் தலம் பழனி, எனவே பழனியைத் திருப்பதி போலத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பழனி மலை அடிவாரத்தில் உள்ள அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றினால் மட்டுமே வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். 1999இல் மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்த போது மட்டும் பாஜக நல்ல கட்சியாகத் தெரிந்ததா. கூட்டணி வேறு கொள்கை வேறு என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டுத் தொழில் நலிவடைந்து வருகிறது. அதை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தோல் பதனிடும் தொழில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மேம்படுத்தப்படும். தமிழக மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரித்தார் முதல்வர் பழனிசாமி.

Related posts

Leave a Comment