கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும், திமுக இளைஞரணிச் செயலாளராக பிறகு பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தை போர் நடந்தது.
கிராமசபை உள்ளிட்ட திமுக தனது வாக்குறுதிகளை காப்பியடிப்பதாக கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், “நாங்கள் இதையெல்லாம் ஐம்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளாக கமல்ஹாசன் தூங்கிக் கொண்டிருந்தாரா?”என்று கேள்வி எழுப்பினார் உதயநிதி.
இந்நிலையில் இந்த மோதல் சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. திமுக மீது தொடர்ந்து தன் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டி வரும் கமல்ஹாசன் நேற்று (மார்ச் 24) தனது கோவை தெற்கு தொகுதிக்கென சிறப்பு தேர்தல் உறுதிமொழிகளை அறிவித்தார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உதயநிதி பற்றி கேட்கப்பட்டபோது,
“நான் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் படம் நடித்திருக்கிறேன்.. அதற்காக பணம் வாங்கியிருக்கிறேன். அப்போது கூட இது சரியான பணமா என்று பார்த்துதான் வாங்கியிருக்கிறேன். அதற்கு வரியும் கட்டியிருக்கிறேன். உதயநிதி கூட படம் பண்ணிவிட்டாரே இவர் நேர்மையானவர் இல்லை என்று சொன்னால் நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும். உதயநிதி நேர்மையானவர் இல்லை என்பது என் வாதம். நான் நேர்மையானவர் என்பது என் வாழ்க்கை” என்று தெரிவித்தார் கமல்ஹாசன்.
மேலும் பொதுக்கூட்டத்தில், “நேர்மையை நான் தினந்தோறும் பழகுகிறவன். நேர்மை என்பது என் எலும்போடு ஒட்டியிருக்கும் தோல். இவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது. பாஜக கொடுக்கிறதா என்று கேட்கிறார்கள். ஜிஎஸ்டி கொண்டுவந்த அன்றில் இருந்தே பாஜகவை எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். நான் பாஜகவின் பி டீம் என்பது திமுக மட்டுமே பரப்பும் பொய். நான் மகாத்மா காந்திக்கு மட்டுமே பி டீம்”என்றும் கூறினார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலில், “கமல்ஹாசன் பற்றியெல்லாம் நான் கமென்ட் பண்ண விரும்பவில்லை. அவரையெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை” என்று சுருக்கமாக பதிலளித்தார்.
உதயநிதியின் இந்த கமென்ட் பற்றி மீண்டும் செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் கேட்க அவர் சிரித்துக் கொண்டே, “சரி….எடுத்துக் கொள்ள வேண்டாம்”என்று கூறினார்.