அமலாக்கதுறை மீது நீதிவிசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு

கேரளத்தில் தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுதாரியான ஸ்வப்னாவின் சர்ச்சைக்குரிய வாக்குமூலத்தால், மாநில அரசுக்கு அமலாக்கத் துறை மூலம் நெருக்கடி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் மீதும் சேர்த்து நீதிவிசாரணை நடத்த அந்த மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் நேற்று (மார்ச் 26) கூடிய அமைச்சரவையில், ஓய்வுபெற்ற நீதிபதி மோகனன் தலைமையில் இந்த நீதி விசாரணை ஆணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக, திருவனந்தபுரத்தில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தூதரகம் மூலம் தங்கமும் டாலர்களும் கடத்தப்பட்டதாகவும் அதில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் ஸ்வப்னா வாக்குமூலம் அளித்தார் என்று தகவல்கள் வெளியாகின. அவருடன் குற்றம்சாட்டப்பட்ட சரித் என்பவரும் இதேபோல வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் கசிந்தன.

இருவரும் அமலாக்கத் துறையின் மிரட்டலால்தான் அவ்வாறு வாக்குமூலம் அளித்தனர் என பின்னர் அவர்களே தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஸ்வப்னாவை அமலாக்கத் துறையினர் விசாரித்தபோது உடன் பாதுகாப்புக்காக இருந்த மாநில போலீஸ் பெண் அதிகாரி, ஸ்வப்னாவுக்கு அமலாக்கத் துறை நெருக்கடி தந்து வாக்குமூலம் பெற்றதை தான் பார்த்ததாகக் கூறியது இந்த விவகாரத்தில் இன்னொரு திருப்பத்தைத் தந்தது.

பெண் போலீஸ் அதிகாரிகளின் வாக்குமூலத்தின்படி அமலாக்கத் துறையினர் மீது கேரள போலீஸ் வழக்கு ஒன்றையும் பதிவுசெய்தது. மத்திய அரசின் ஒரு விசாரணை முகமை மீதே வழக்கு பதியப்பட்டது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் சார்பில் தங்கள் மீதான கேரள போலீசின் முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கு நீடிக்கிறது.

இந்த நிலையில் அமைச்சரவையின் இன்றைய முடிவு, இந்த விவகாரத்தை மேலும் முறுகல் நிலைக்குக் கொண்டுபோயிருக்கிறது. சர்ச்சைக்குரிய ஸ்வப்னாவின் ஒலிப்பதிவு வாக்குமூலம், இன்னொரு குற்றச்சாட்டுதாரியான சரித்தின் கடிதம் ஆகியவை உள்பட ஐந்து விவகாரங்கள் குறித்து ஆணையம் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரமானது சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முடுக்கிவிடப்பட்ட நிலையில், கடந்த நவம்பரில் மாநில அரசு முக்கியமான ஒரு கொள்கை முடிவை எடுத்தது. சிபிஐ, தேசியப் புலனாய்வு முகமை, நிதித்துறையின் அமலாக்கத் துறை, சுங்கத் துறை, வருமான வரித் துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, உளவுத் துறை ஆகியவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் தொடர்புடையவர்கள் மீது பல முக்கிய வழக்குகளில் விசாரணையை நடத்தின. அதையடுத்து கேரளத்தில் வழக்குகளைப் பதிவதற்கு சிபிஐக்கு வழங்கப்பட்ட பொதுப்படையான இசைவை மாநில அரசு திரும்பப்பெற்றது, முக்கியமானது.

மத்திய அரசின் கைப்பாவையாக அரசியல் ரீதியான பழிவாங்கலுக்காக அமலாக்கத் துறை முதலிய மத்திய அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என இடது ஜனநாயக முன்னணி அரசு குற்றம்சாட்டிவருகிறது.

தேர்தல் நெருங்க நெருங்க மைய, மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகளுக்கு இடையிலான இந்த மோதல், அரசியலைவிட விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இரு தரப்பினருக்கும் ஒருவருக்கொருவர் நீயா நானா பார்த்துவிடுவோம் என்கிறபடி அடுத்தடுத்து சட்டரீதியான சதுரங்க ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளதைப் போலவே தெரிகிறது.

இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது, நீதி விசாரணைக்கு தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment