ராகுல் பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார்

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மார்ச் 28 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அதில் மதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் வந்த நிலையில்… இன்று மதிமுக வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைகோ கலந்துகொள்வார்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 28 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பத்து நாட்களுக்கு முன்பே திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தேதி வாங்கிவிட்டார். அதனால் அந்த தேதியில் வைகோவால் சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. வைகோவுக்கு பதிலாக மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கலந்துகொள்வார் என்று மதிமுக வட்டாரத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேசிய அளவிலான தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ளும் கூட்டத்தில் கூட்டணியின் எல்லா கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புவதாகவும், தேவையற்ற சலசலப்புகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் வைகோவுக்கு திமுக சார்பில் தகவல் அனுப்பப்பட்டது. இதில் தன் தலை உருளுவதால் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் திமுக தலைமையிடம், ‘நான் தான் வைகோவிடம் தேதி வாங்கினேன். பிரச்சாரத்தை வேறு தேதியில் வைத்துக்கொள்ளலாம்’என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில்தான்… வைகோ தேர்தல் சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்ட தகவலை மதிமுக இன்று (மார்ச் 26) வெளியிட்டுள்ளது. அதன்படி, “ மார்ச் 26 திருவேங்கடம், சங்கரன்கோவில், கடையநல்லூர், சுரண்டை- மார்ச் 27 காயல்பட்டினம், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி. மார்ச் 28 சேலம் -மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment