சினிமா-அரசியல் என் இரு கண்கள் போன்றது – நடிகர் சுரேஷ்கோபி

அரசியலையும் , சினிமாவையும் கைவிட மாட்டேன் என நடிகரும் திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வருகிற 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மலையாள நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு உள்ளது. அதற்குள் கட்சி மேலிடம் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுமாறு அவரை கேட்டுக்கொண்டது.

இதையடுத்து அவரும் திருச்சூர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இவர் போட்டியிட்டார். அதில் திருச்சூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை வாங்கி இருந்தார். எனவே இந்த தேர்தலில் அவர் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசியலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக சினிமாவையும், நடிப்பையும் கைவிட மாட்டேன். நல்ல கலைஞனுக்கு உண்மையான மனம் இருக்கும். அதை நான் உணர்கிறேன். ஒருபோதும் அதனை கைவிடமாட்டேன். அரசியலுக்கு வந்ததால் நடிப்பை நிறுத்தி விடமாட்டேன்.

அரசியலில் நேரம் நன்றாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நல்லமுறையில் முடியும். எனது மேல்சபை எம்.பி. பதவிகாலம் முடிய இன்னும் ஓராண்டு இருக்கிறது. எனது தலைவர் விரும்பினால் மீண்டும் அதே பொறுப்பில் தொடர்வேன். அதற்கு முன்பு மக்கள் இங்கு என்னைத் தேர்ந்தெடுத்தால் இந்த பணியை மேற்கொள்வேன்.

கேரளாவில் பிரபலமாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் இ.கே.நாயனார், காங்கிரஸ் தலைவர் கருணாகரன் ஆகியோருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது.

ஒரு கட்டத்தில் நான் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு, பாஜக சரியாக இருக்கும் என்று கருதினேன். எனவே தான் அக்கட்சியில் இணைந்தேன். சபரிமலை பிரச்சினையைப் பொறுத்தவரைப் பிற மத வழிபாட்டுத் தலங்களில் என்ன நிர்வாக நடைமுறைகள் இருக்கிறதோ, அதே நடைமுறையை இந்து கோயில்களுக்கும் வழங்க வேண்டும். அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்க மறுக்கக்கூடாது” என்று கூறினார்

Related posts

Leave a Comment