ஆ.ராஜாவுக்கு கமல்ஹாசன் ஆதரவா?

முதல்வர் குறித்து ஆ.ராசா பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான தகவலுக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

‘நான் பேசியது எல்லாம் அரசியலில் இருவருக்கும் இடையே உள்ள உயரம், ஒப்பீடு. ஒரு குழந்தை ஆரோக்கியமான குழந்தை, இன்னொரு குழந்தை ஆரோக்கியமற்ற குழந்தை என்று பேசினேனே தவிர, இரண்டு வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு, முதலமைச்சரின் பிறப்பைக் கொச்சைப்படுத்திப் பேசினேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது’ என்று ஆ.ராசா விளக்கமளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?” எனக் கண்கலங்கினார்.

இந்த நிலையில் நேற்று அறிக்கை வெளியிட்ட ஆ.ராசா, “முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டுக் கலங்கினார் என்ற செய்தி நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இது பொறுத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக எனது மனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மன்னிப்புக் கேட்டிருந்தார்.

இந்தச் சூழலில் நேற்று முதல் சமூக வலைதளங்களில், ஆ.ராசாவுக்கு கமல் ஆதரவு தெரிவிப்பதாக ஓர் அறிக்கை வைரலானது. அதில், “கருத்துச் சுதந்திரத்தை எதிர்க்கும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்டித்து ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் என்றும் துணை நிற்கும் என நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயம் ஆ.ராசாவைக் கண்டித்துத் தேர்தல் நேரத்தில் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் சமுதாயச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகளால் ஊடகங்களில் பரவும் இந்தச் சுற்றறிக்கை தவறானது. அருவருக்கத்தக்க இச்செயலை செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment

four × 4 =