அடுத்த மாதம் ஆட்சி கவிழும் என்று சொன்னதைப் போலத்தான், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததும் பழைய பன்னீர்செல்வமாக ஓபிஎஸ் உருவெடுப்பார்; அடுத்த தர்மயுத்தம் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பமாகும் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிறின. எதுவும் நடக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தையும், அதனால் கிடைக்கும் பலனையும் ஒரு நாள்கூட விடாமல் அனுபவிக்க நினைத்துத்தான் ஓபிஎஸ் அமைதியாக இருக்கிறார்; ஆட்சிக்காலம் முடிந்ததும் அவருடைய ஆட்டம் ஆரம்பமாகும் என்றார்கள். அதுவும் ஆகவில்லை. இறுதியாக வேட்பாளர் பட்டியலில் இருவருக்கும் இடையில் பெரிய போர் வெடிக்கும்; பன்னீர் கண்ணீரோடு வெளியே வந்து பேட்டி கொடுப்பார் என்று காத்திருந்தார்கள். கடைசி வரை எதிர்க்கட்சியினரோ, அரசியல் விமர்சகர்களோ கணித்தபடி எதையும் நடக்கவிடவில்லை இரட்டையர். இருப்பினும் இருவரிடையே ஏதோ ஓர் இறுக்கம் இருந்து கொண்டிருந்தது.
முதல்வர் வேட்பாளர் என்று பொதுக்குழுவில் அறிவித்ததற்குப்பின், வேறு எங்குமே பன்னீர் செல்வம் அந்த வார்த்தையைச் சொல்லவே இல்லை என்பதும், பழனிசாமியைப் போல அவர் எங்குமே பரப்புரைக்குப் போகவே இல்லை என்பதும் நெருடலாகவே இருந்தது. இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போர், எந்த நேரத்திலும் யுத்தமாக வெடிக்குமென்று ஊடகங்கள் யூகங்களை வெளிப்படுத்தின. ஆனால், அதற்கு மாறாக இருவருக்கும் இடையில் இருந்த பிணக்குகளும், கருத்து முரண்களும் களையப்பட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமும் நட்பும் ஏற்பட்டிருப்பதாக அதிமுக நிர்வாகிகள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர். அவர்கள் இதற்கு ஆதாரமாகக் காண்பிப்பது, நேற்றைய நாளிதழ்களில் வெளியான முதல் பக்க விளம்பரம். இதுவரை ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ விளம்பரங்களில் எடப்பாடி பழனிசாமியின் படமே பிரதானமாக இருக்கும். பன்னீர் செல்வம் படம் அரிதாக வரும்.
இதனால்தான் ஓபிஎஸ் தரப்பில் தனியாக முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில், ‘விசுவாசத்தில் கலியுக பரதன்’ என்றும், ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்றும் தலைப்பிட்டு வெளியிட்ட விளம்பரங்கள் அனைத்தும், பழனிசாமியைச் சீண்டுவதற்காகவே வெளியிடப்பட்டது என்றும் கருத்துகள் பரவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில்தான் முதல்முறையாக ‘தொடரட்டும் வெற்றிநடை’ என்று நேற்று வெளியான தமிழ் மற்றும் ஆங்கில விளம்பரங்கள் அனைத்திலும் இபிஎஸ், ஓபிஎஸ் இருவருடைய கையெழுத்துகளும் இடம் பெற்றுள்ளதையும் அவர்கள் காண்பித்தனர். அதில், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் மேலே வரிசைப்படுத்தப்பட்டிருக்க அதன் கீழே ‘எங்கள் உள்ளத்திலிருந்து வந்த வாக்குறுதிகள் உங்கள் இல்லத்திற்கு வந்து சேரும்’ என்ற வார்த்தைகளுடன் இருவருடைய கையெழுத்துகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இப்படியொரு மாற்றத்திற்கான காரணங்களை விளக்கினார் அதிமுக தலைமைக்கழக நிர்வாகி ஒருவர்…
‘‘தேர்தல்தான் ஒரே காரணம். முதலில் இருந்தே இந்தத் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதால் மட்டுமல்ல; தன்னை நம்பி கட்சியில் உடனிருந்த அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவருடைய எதிர்காலத்தையும் இந்தத் தேர்தல்தான் தீர்மானிக்கும் என்பதால் அதற்காக என்ன விலை கொடுத்தாவது வெற்றியடைய வேண்டுமென்று அவர் நினைத்திருக்கிறார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் தமிழக அரசு இருக்கும் நிலையிலும், ஏராளமான திட்டங்களை அவர் அறிவித்ததும் அதனால்தான். மிகக்கடுமையான திமுக எதிர்ப்பு நிலையை எடுத்ததும், ஸ்டாலினைக் குறிவைத்துத் தாக்குவதும் அதே காரணத்தால்தான். ரேஷன் கடையில் கொடுத்த பணம், செயல்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றுடன் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் போன்ற திட்டங்களால் அதிமுக வாக்கு வங்கி மேலும் பலமாகியிருக்கிறதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. ஆனாலும் பல தொகுதிகளில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரிந்து கிடப்பதையும், அதனால் திமுகவுக்குச் சாதகமாக வாய்ப்பு இருப்பதையும் இபிஎஸ்ஸின் அரசியல் ஆலோசகர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்குப் பின்பே, யோசித்து சில முடிவுகளை எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீரை அழைத்து, சில விஷயங்களை மனம்விட்டுப் பேசியிருக்கிறார். அதுவரையிலும் ஓபிஎஸ் சற்று இறுக்கமாகத்தான் இருந்தார். முதல்வர் தொடர்ந்து பல விஷயங்களைப் பேசியதும் இருவருக்கும் இடையில் இருந்த இறுக்கம் குறைந்து நெருக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஏற்கெனவே தென்மாவட்டங்களில் தன்னுடைய ஆட்களுக்கு சீட் கொடுக்கவிருந்ததைத் தவிர்த்து, ஓபிஎஸ் கொடுத்த பட்டியலின்படிதான், அவருடைய ஆதரவாளர்கள் பலருக்கும் சீட் கொடுத்தார் முதல்வர். அதையும் எடுத்துச் சொல்லி, ‘இன்னும் என்ன பிரச்சினை’ என்று பல விஷயங்களையும் உடைத்துப் பேசியிருக்கிறார். அதற்குப் பின்பே ஓபிஎஸ் மனதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்துக்கு பரப்புரைக்குச் சென்றார் ஓபிஎஸ். அவர் தங்கியிருந்த இடத்துக்குப் போய்ப் பார்த்தார் இபிஎஸ். அதன்பின் இபிஎஸ் வீட்டுக்கு ஓபிஎஸ் சென்றார். எடப்பாடி தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இதற்கிடையில்தான் இபிஎஸ் தாயார் பற்றி ஆ.ராசா பேசிய விவகாரம் பெரிதாக வெடித்தது. அதற்குப் பின் ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்ற முதல்வர், ஓபிஎஸ் தாயாரிடம் ஆசி வாங்கினார். இப்படியாக இருவருக்குமான நெருக்கம் இப்போது மேலும் அதிகமாகியிருக்கிறது. இது அதிமுக நிர்வாகிகளிடமும், கட்சித் தொண்டர்களிடமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தென்மாவட்டங்களில் அதிருப்தியில் ஒதுங்கியும், வேலை பார்க்காமலும் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும் இப்போது களத்தில் இறங்கி தீயாக வேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான தொகுதிகளில் வெற்றிக்கனியைப் பறிப்போம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது!’’ என்றார்.
வென்றாலும் தோற்றாலும் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் இனிமேல்… நண்பேன்டா