ஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் – திமுக புகார்

தேர்தல் ரத்து என்று செய்தி வெளியான விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்றும் கே.என்.நேருவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும் திமுக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் நேற்று (மார்ச் 29) அளித்த புகாரில், “முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை ஜீரணிக்க முடியாத ஆளும்கட்சியினர் மற்றும் அதிகாரிகள், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பணம் கொடுத்து திமுக மற்றும் கட்சித் தலைவர்கள் மீது கெட்ட பெயர்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கே.என்.நேருவின் பெயரைக் களங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

கடந்த மார்ச் 27ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் ‘கரூர், திருவண்ணாமலை, திருச்சி மேற்கு தொகுதிகளில் தேர்தல் ரத்து?’ என்று செய்தி வெளியானது. மேலும், கே.என்.நேரு காவல்நிலையங்களுக்குப் பணம் கொடுத்து தேர்தல் குழுவினரின் செயல்பாடுகள் அறிந்து கொள்வதாகவும் சமூக ஊடகங்களில் பரவியது.

அதுபோன்று, திருச்சி காவல் ஆணையர் லோகநாதன், திருச்சி மேற்குத் தொகுதியில் அமைந்துள்ள ஆறு காவல் நிலையங்களில் சோதனை செய்தபோது பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. தில்லை நகர் காவல் நிலையத்தில் 12 கவர்களில் 24,000 ரூபாயும், ஜிஹெச் காவல் நிலையத்திலிருந்து 20 கவர்களில் 40,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

காவல் ஆணையர் செய்த விசாரணை நிமிடத்துக்கு நிமிடம் சமூக ஊடகங்களில் எப்படி பரவியது? யார் தகவல் கொடுத்தது? அதோடு, கைப்பற்றப்பட்ட பணம் திமுகவுக்கு சாதகமாக சில வழக்கறிஞர்கள் கொடுத்தது எனக் கூறப்படுகிறது.

இவை எல்லாம் கே.என்.நேருவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது எனத் தெரியவருகிறது.

எனவே கீழ் வரும் மூன்று கேள்விகளுக்குத் தெளிவான விசாரணை வேண்டும்…

மேற்குறிப்பிட்ட மூன்று தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்படும் என்று பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது எப்படி?

சமூக ஊடக நபர்கள் எந்த விதத்தில் ரகசிய விசாரணை மற்றும் அறிக்கைகளை எப்படிப் பெறுகிறார்கள்?

விசாரணையின் அறிக்கைகள் கசிய விட்டதற்கு யார் பொறுப்பு?

உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்துள்ள முதலமைச்சரின் தலையீடு இல்லாமல், வருவாய்த்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கண்காணித்துக் கொண்டு இருக்கும்போது, போலீஸ் அதிகாரிகளின் விசாரணை குறித்த விவரங்கள் வெளி வர வாய்ப்பே இல்லை.

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்தால், ஆளும்கட்சியின் விளையாட்டும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அவர்கள் பின்பற்றும் குறுக்குவழித் திட்டமும் தெரியவரும்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி, ஆளும்கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், தேர்தல் நேர்மையாக நடைபெறவும் தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தபால் வாக்களிக்கக் காவல் துறையினருக்குப் பண விநியோகம் செய்ததாகப் புகார் எழுந்ததையடுத்து, திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் வி.பத்மநாதன் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment