திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்தா?- மாவட்ட ஆட்சியர் விளக்கம்

திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 8 காவல்நிலையங்களில் காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நடந்த சோதனையில், பணத்துடன் கூடிய கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் திருச்சியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு அம்மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

மேற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் திருச்சி மாவட்ட ஆட்சியருமான திவ்யதர்ஷினி இன்று(மார்ச் 29) ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா புகார் வந்ததைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளும் ,காவல் துறையும் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனால், திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற செய்தியில் உண்மை இல்லை. மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம். அப்படி எதுவும் என்றால், அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம் என்றார்.

மேலும், முசிறி மற்றும் மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இதுவரை ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

Related posts

Leave a Comment