அஜீத்தை கோபப்பட வைத்த ரசிகர்கள்

ஒரு பக்கம் நடிகர் விஜய் தன் வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச் சாவடிக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்றால், அதற்கு முன்பாக நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் வாக்குச் சாவடியில் அவருடன் செல்பி எடு்க்க முற்பட்டு அவரைக் கோபப்பட வைத்ததும் இன்னொரு பரபரப்பையும் ஏற்படுத்தியது.

காலை 7 மணிக்கு முன்பாகவே நடிகர் அஜீத்தும், அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியும் வாக்குச் சாவடிக்கு வந்துவிட்டார்கள். வாசலிலேயே மறித்துவிட்ட அவரது ரசிகர்கள் அவரை செல்பி எடுக்கும் நோக்கில் முற்றுகையிட்டார்கள்.

போலீஸார் ஓடோடி வந்து அவர்களை விலக்கி அஜீத்தையும், ஷாலினியையும் பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கேயும் ஒரு ரசிகர் விடாமல் செல்பி எடுக்க முயன்று கொண்டேயிருக்க.. ஒரு கட்டத்தில் கடும் கோபமான அஜீத் அந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.
அஜீத் போகும் இடமெல்லாம் ரசிகர்களும் கையில் செல்போனை வைத்துக் கொண்டு மொய்க்கத் துவங்க.. படாதபாடுபட்டு அவரை வாக்குச் சாவடி அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.
வாக்களித்துவிட்டு திரும்பிய பின்புதான் அஜீத், தனது ரசிகரிடமிருந்து பறிமுதல் செய்த அந்த செல்போனை அதே ரசிகரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு இனிமேல் இது போல் செய்யாதீர்கள் என்று எச்சரிக்கையும் செய்தார்.

மறுபடியும் அவர் காரில் ஏறுவதற்குள் அவரும், ஷாலினியும் படாதபாடுபட்டுவிட்டார்கள். வந்த அத்தனை ரசிகர்களுக்கும் அவருடன் கை குலுக்கவோ, பேசவோ ஆசையில்லை.. அனைவரின் ஆசையும் ஒன்றுதான். எப்படியாவது செல்பி எடுக்க வேண்டும் என்பதுதான்..! இதற்குத்தான் இத்தனை மல்லுக் கட்டல்கள் நடந்தது.

பொது இடங்களில் தங்களுடைய மானசீக கலைஞர்களை கண்டு களிக்க அவரது ரசிகர்கள் விரும்பலாம். ஆனால், அது அந்தக் கலைஞர்களை கோபப்பட வைக்கக் கூடாது. சங்கடப்பட வைக்கவும் கூடாது. இதை அவருடைய ரசிகர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Related posts

Leave a Comment