பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 2-வது திரைப்படம் ‘கர்ணன்’.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்திருக்கிறார். உடன் ‘நட்டி’ நட்ராஜ், யோகிபாபு, ரஜிஷா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ள சூழலில் அதே ‘அசுரன்’ படத்திற்கு தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது என்பதால் படத்தின் தயாரிப்பாளரான தாணு மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
இந்தச் சூழலில் தாணுவின் அடுத்தப் படம்.. தனுஷின் அடுத்தப் படம் என்ற ரீதியில் வெளியாகவிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு பஞ்சாயத்து யூனியன் தலைவர் முருகேசனின் கொலைச் சம்பவம்தான் இந்தப் படத்தின் மையக் கரு என்பதால், இதுவும் படத்திற்குக் கிடைத்த இன்னொரு மிகப் பெரிய விளம்பரமாகியுள்ளது.
அதோடு இந்தப் படத்தில் இடம் பெறும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு அவையும் சர்ச்சைகளை உருவாக்கி, மிகப் பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன.
‘பரியேறும் பெருமாள்’ என்னும் சமூக விழிப்புணர்வு படத்தை ஹிட்டாக்கி காட்டிய இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படம் இது என்பதால், மொத்த திரைப்பட ரசிகர்களும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் வரும் 9-ம் தேதி வெளியாவதையொட்டி.. இன்று மாலை 7.10 மணி முதல் இந்தப் படத்தின் முன் பதிவு தமிழகமெங்கும் துவங்கியது.
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இந்தக் ‘கர்ணன்’ படம்தான் மிகப் பெரிய ஹிட்டை கொடுக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.