வேட்பாளர்களை மிரட்டும் கொரானா ஸ்ரீவில்லிபுத்தூர் மாதவராவ் மரணம்

சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதிக்காக அனைவரும் காத்திருந்த நிலையில்… விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று (ஏப்ரல் 11) காலமானார். அரசியல் வட்டாரங்களில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1987 முதல் காங்கிரஸில் தீவிரமாக இருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லையா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அவரோடு சென்னை, டெல்லி என்று அரசியலில் பயணித்து பலரை சந்தித்த நிலையில் தனது செல்லையா என்ற பெயரை மாதவராவ் என்று மாற்றிக் கொண்டார். மத்திய அமைச்சர் அருணாசலத்தின் ஆதரவில் சமையல் எரிவாயு ஏஜென்சி எடுத்து நடத்தத் தொடங்கினார். பின் அதையே தொழிலாக செய்தார்.

காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸின் நெருங்கிய நண்பரான மாதவராவ், கடந்த மாதம் பீட்டர் அல்போன்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று, சிகிச்சை பெறும் அறைக்கு வெளியே நின்று பீட்டரோடு போனில் பேசி ஆலோசனைகள் செய்து வந்தார். அப்போதே நண்பர்கள் பலரும், ‘அண்ணே அடிக்கடி ஆஸ்பத்திரி வராதீங்க. தடுப்பூசி போட்டுக்கங்க’என்று அவரிடம் தெரிவித்தனர்.

. நீண்ட கால காங்கிரஸ் காரரான மாதவராவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் விருதுநகர் திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்தார் பின் மார்ச் 17ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த மறுநாளே மாதவராவுக்கு லேசான காய்ச்சல் வர, தனது மருத்துவர் நண்பரின் ஆலோசனைப்படி . மதுரை அப்பல்லோவில் அட்மிட் ஆனார். அதேநேரம் அவருக்கு ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் இருந்ததால்,தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்தனர். சில நாட்களில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தேர்தல் பிரச்சாரத்துக்கு அவரால் செல்ல முடியாததால் அவரது மகளும், அவரது டம்மி வேட்பாளருமான திவ்யாதான் பிரச்சாரம் செய்தார், ஒரு கட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளராக திவ்யாவே போட்டியிட இருக்கிறார் என்று தகவல் பரவ, அதை மறுத்து விளக்கமும் அளித்தார் மாதவராவ்.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு மருத்துவமனைக்கு சென்ற மாதவராவ் பிரச்சாரக் களத்துக்கே வர முடியவில்லை. தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக அவர் உடல் நிலை மோசமானதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) காலை அவர் காலமாகிவிட்டார்.

மே 2 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் ஒரு வேளை வெற்றிபெற்றால், தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. மாறாக அவர் வெற்றி பெறவில்லை எனில் மாற்றம் எதுவும் இருக்காது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

தேர்தல் களத்தில் இருந்த வேட்பாளர்கள், பிரச்சாரம் செய்த தலைவர்கள் பலருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகிவருகிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான தனது மனைவி குஷ்புவுக்காக பிரச்சாரம் செய்த இயக்குனர் சுந்தர்.சி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. டெல்லியில் தேர்தல் பிரச்சாரக் களத்தில் செயல்பட்ட இளம் பத்திரிகையாளர் ஒருவர் கொரோனாவால் பலியாகிவிட்டார்.

இப்படி தேர்தல் களத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்டவர்களும் தற்போது கொரோனாவால் தாக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால், “தேர்தல் களத்தில் மைக் செட் பணியில் இருந்து, பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட கட்சித் தொண்டர்கள் , மக்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பற்றிய எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.. ஒவ்வொருவரும் கொரோனா சோதனை செய்துகொள்ளவேண்டும்” என்கிறார்கள் சுகாதாரத்துறையினரும், மருத்துவர்களும்.

Related posts

Leave a Comment