கட்சிக்கு விழும் வாக்கு கமலுக்கு கிடைத்த தகவல்

இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்குமா, அதிமுக ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற கேள்விக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம், கமலும், சீமானும், தினகரனும் எந்தெந்தக் கட்சியின் வாக்குகளை எவ்வளவுக்குப் பிரிப்பார்கள் என்பதுதான். மற்றவர்களை அப்புறம் பார்க்கலாம். உலக நாயகன் முதன்முறையாகக் களம் இறங்கியிருக்கும் சட்டமன்றத் தேர்தல் இது என்ற வகையில், அவருக்கு எவ்வளவு வாக்குகள் விழும், அது யாருடைய வெற்றியை பாதிக்கும் என்பதுதான் படித்த, மேல்தட்டு மக்களிடம் நடக்கின்ற பட்டிமன்றமாக இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, கோவையில் மையம்கொண்ட மய்யத்தின் புயல், வாக்குப்பதிவுக்குப் பின்புதான் சென்னையில் நிலை கொண்டிருக்கிறது. ஏற்கெனவே காலில் ஏற்பட்ட காயத்தோடு, களத்தில் கலக்கிக்கொண்டிருந்த கமல், இப்போதுதான் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும், நமக்கு எவ்வளவு வாக்குகள் விழும் என்று தனது கட்சி நிர்வாகிகளிடமும், கட்சிக்கு அப்பாற்பட்டு, தனக்கிருக்கும் நட்பு வட்டாரத்திலும் கமல் விசாரித்துக் கொண்டேயிருக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. அவர்கள் அவருக்கு அப்படி என்ன தகவல்களைச் சேர்க்கிறார்கள், அவர் என்ன நம்பிக்கையில் இருக்கிறார் என்று கமலின் நிழலாக வலம் வரும் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்…

‘‘கட்சி துவக்கிய சில மாதங்களிலேயே நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் எதிர்கொண்டோம். அப்போது கமலுக்கு அரசியலும் புதிது; தேர்தலும் புதிது. பல விஷயங்கள் பிடிபடவே இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்குள் அரசியல்ரீதியாகப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலைப் போல சட்டமன்றத் தேர்தல் களம் அ்வ்வளவு எளிதாக இல்லை. முற்றிலும் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. ரஜினியுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார். அது நடக்கவில்லை என்றதும் சற்று விரக்தியுடன்தான் களத்தில் இறங்கினார். சட்டமன்றத் தேர்தலில் விளையாடிய பணம் அவருக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், அலுப்பூட்டுவதாகவும் இருந்தது. ஆனாலும் கோவையில் அவர் போட்டியிடுகிறார் என்றதும் அவருக்குக் கிடைத்த வரவேற்பு அவரை உற்சாகப்படுத்தியது. கோவையில் தெருவில் இறங்கி அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தபோது, மக்கள் கொடுத்த ஆதரவு, அவருக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. வாக்குப்பதிவுக்குப் பின்னும் அந்த நம்பிக்கை அவருக்கு நிறையவே இருக்கிறது.

அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில், ஏற்கெனவே கடந்த தேர்தலில் வாங்கியிருந்த 23,000 வாக்குகளுடன் அவருக்கென்று கணிசமாக வாக்குகள் விழுந்திருக்கின்றன. அதில் திமுக வாக்குகளும், அதிமுக வாக்குகளும் இருக்கின்றன. அங்கே 30,000 இஸ்லாமியர் வாக்குகள் இருக்கின்றன. அவை இவருக்கு அதிகமாகக் கிடைத்திருந்தாலும் அல்லது திமுகவுக்குப் பாதி இவருக்குப் பாதி என்று கிடைத்திருந்தாலும் கண்டிப்பாக ஜெயித்து விடுவார். இவைதான் அவருக்குக் கிடைத்த தகவல்கள். ஆக இந்த முறை மக்கள் நீதி மய்யம் முதன்முறையாக சட்டமன்றத்திலும் காலடி வைத்துவிடும். அதுவும் எங்கள் தலைவரே செல்வதால் அது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாக அமையுமென்பது நிச்சயம். ஒரு தொகுதியில் வெற்றி என்பதோடு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், மயிலாப்பூர், திருவெறும்பூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் இரண்டாவது இடத்துக்கு வருவதற்கும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இதைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளைப் பற்றியும் அவருக்கு நிறைய தகவல்கள் வருகின்றன. நகர்ப்புறங்களில் படித்தவர்கள், மேல்தட்டு மக்கள், உயர் வகுப்பினர் என பல தரப்பினரின் வாக்குகளும் கணிசமான அளவில் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான வாக்குகள், திமுகவுக்குச் செல்லக்கூடியவை. அதனால் பல தொகுதிகளில் திமுகவின் வெற்றி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதைப்பற்றித்தான் அவர் அதிகமாக விசாரித்துக் கொண்டேயிருக்கிறார். தமிழகம் முழுவதும் 150க்கும் குறைவான தொகுதிகளில்தான் கட்சி போட்டியிட்டிருக்கிறது. அதிலும் நகர்ப்புறங்களில் மட்டுமே நிறைய வாக்குகள் விழுந்திருக்கின்றன. கிராமப்புறங்களில் கட்சிக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை வைத்து 6இல் இருந்து 8 சதவிகித வாக்குகள் எங்களுக்குக் கிடைக்குமென்று தகவல்கள் கிடைத்துள்ளன. அது அவரை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால், அவர்களுக்கு கூடுதலாக 2 சதவிகிதம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அமமுகவுக்கு 4இல் இருந்து 5 சதவிகித வாக்குகள் கிடைக்குமென்றும் அவரிடம் புள்ளி விவரம் தரப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியிலிருந்து முதலில் வெளியே வந்த பச்சமுத்து கட்சிதான் முதலில் இவருடன் சேர்ந்தது. அதிமுக கூட்டணியிலிருந்து வந்த சரத்குமார் பின்னால் வந்து சேர்ந்தார். ஆனால் ஒட்டுமொத்தமாக கமல் அமைத்த கூட்டணியால் திமுக கூட்டணியின் வாக்கு வங்கிக்குத்தான் பாதிப்பு ஏற்படுமென்பது உறுதியாகியிருக்கிறது’’ என்றார்கள்.

கமல் கட்சியினர் போடும் கணக்கு பற்றி, தமிழக உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘‘கமல் கட்சிக்கு நகர்ப்புறங்களில் கணிசமாக வாக்குகள் விழுந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கமல் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதேபோன்று இவருக்கு 8 சதவிகிதம், சீமானுக்கு 10 சதவிகிதம், தினகரனுக்கு 5 சதவிகிதம் என்று கணக்குப் போடுவது மிகவும் அதீதமாகத் தெரிகிறது. இந்த மூன்று கட்சியினருமே 20 சதவிகித வாக்குகளை வாங்கிவிட்டால் திமுக, அதிமுக கூட்டணிக்கு எவ்வளவு வாக்குகள் விழும் என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு தொகுதியையும் கணக்கிட்டால் மூன்று கட்சிகளுக்கும் சேர்த்தே 10 – 12 சதவிகித வாக்குகள்தான் வாங்க முடியும். மாநில அளவில் சராசரியாகப் பார்த்தால் இது கொஞ்சம் அதிகமாகலாம்’’ என்றார்.

Related posts

Leave a Comment