அறுபதுக்கு அப்புறம் பார்க்கலாம் – விவேக் நினைவுகள் – 1

விவேக் என்றால் விழிப்புணர்வு என்றே அவருக்கு அஞ்சலி செலுத்தும் பலரும் குறிப்பிட்டு நெகிழ்ந்து வருகிறார்கள். அதேநேரம் விவேக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலரும், ‘இப்படி விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வையே கோட்டை விட்டுட்டாரே?” என்று உரிமையோடு கண்ணீர் சிந்துகிறார்கள்.

எதில் விழிப்புணர்வு இல்லாமல் விட்டுவிட்டார் விவேக்? அவரது நண்பர்களிடமே பேசினோம்.

“பொதுவாகவே தன்னைச் சுற்றியுள்ள தனக்கு நெருக்கமான நண்பர்களின் உடல் நலம் மேல் அக்கறையும் ஆர்வமும் அதிகம் செலுத்துபவர் விவேக். தன் நண்பர்களுக்கு ஏதாவது என்றால் உடனே தனது டாக்டர் நண்பர்களின் நம்பரைக் கொடுத்து பேசச் சொல்லுவார். தானும் பேசி உடனே சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்துவார்.

அதுவும் குறிப்பாக கொரோனா காலத்தில் கடந்த ஏழெட்டு மாதங்களாக விவேக்கின் வேலையே வீட்டில் இருந்தபடியே தனது நண்பர்களுக்கு போன் போட்டு, ‘ஜாக்கிரதையா இருங்க. வெளியில வராதீங்க. மாஸ்க் போட்டுக்கங்க’என்றெல்லாம் அக்கறை வார்த்தைகளையே அதிகம் பேசினார்.

அவருக்கு இதயத்துல பெரிய பிளாக் இருந்திருக்கு. ஆனா அதைப் பத்தி அவருக்கு எதுவும் தெரியலை. தானும் சிரிச்சுக்கிட்டு மத்தவங்களையும் சிரிக்க வைக்கிறதால தனக்கு எதுவும் வராதுனு திடமா நம்பினாரு. நண்பர்கள் வட்டாரத்துல பேசிக்கிட்டிருக்கும்போது டாக்டர் நண்பர் ஒருத்தர் விவேக்கிடம், ‘உனக்கும் வயசாகிடிச்சு. ஒரு முறை மாஸ்டர் செக்கப் பண்ணிக்க’என்று வலியுறுத்தினார். அதற்கு விவேக், ‘இப்ப என்னப்பா அவசரம், 60 வயசுக்கு அப்புறம் பாத்துக்கலாம்ப்பா’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் விவேக். எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர், தனது உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பெறாமலேயே இருந்திருக்கிறார். அவர் முன்பே மாஸ்டர் செக்கப் செய்திருந்தால், இதயத்தில் இருந்த அடைப்பை கண்டுபிடித்திருக்கலாம். அப்போதே சிகிச்சை எடுத்து இந்த பேரிழப்பை தடுத்திருக்கலாம். ஆனா இப்படி 60 வயசையே கிராஸ் பண்ணாம போயிட்டாப்லயே” என்று நண்பன் விவேக்கை இழந்து கண் கலங்குகிறார்கள்.

Related posts

Leave a Comment