தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற அவல நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கியிருப்பதும், நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும் பேரதிர்ச்சியளிக்கிறது”என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மருத்துவமனைகளில் கடுமையாக இருக்கிறது. மருத்துவ ரீதியான ஆக்ஸிஜன் இல்லாமையால் கொரோனா நோயாளிகள் பலர் இறப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொள்ளையடித்துச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கும் ஆக்ஸிஜன் தேவை இருக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து தமிழக அரசுக்கே தெரியாமல் ஆக்ஸிஜன் வெளி மாநிலங்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்டுள்ளதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் – மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
அண்டை மாநில சகோதரர்களும் நம் சகோதரர்களே என்றாலும் – தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படியிருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட இங்குள்ள தலைமைச் செயலாளரிடமோ அல்லது காபந்து சர்க்காரிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ள மத்திய அரசுக்கு மனமில்லை. கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறுவது மட்டுமின்றி – மாநில அரசுகளை கிள்ளுக்கீரைகளாக நினைக்கும் போக்குடன் நடந்து கொள்வது கெடுவாய்ப்பானதாகும்.
நேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்குக் காரணம் – மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா? தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா – கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் – கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?”என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.
மேலும் அவர், “ தற்போது தமிழகம் முழுவதும் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில், நாடு முழுவதும் வீணாகியுள்ள மொத்தம் 44 லட்சம் தடுப்பூசிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 12.10 விழுக்காடு தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளது என்பது ரத்தக் கண்ணீர் வர வைக்கிறது. அனைவரின் உயிர்காக்கும் தடுப்பூசி இவ்வாறு மக்களுக்குப் பயன்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதும் – அதற்குத் தமிழக அரசு சொல்லும் காரணமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கொரோனா முதல் அலை போல் – இரண்டாவது அலையிலும் அ.தி.மு.க. அரசின் இவ்வளவு அலட்சியம் மிகுந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது.
தினந்தோறும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. ரெம்டெசிவர் மருந்தும் போதிய அளவில் கையிருப்பு இல்லை. போதிய ஆர்.டி.பி.சி.ஆர். கிட்ஸ்கள் இல்லை. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கிட்களை விற்க முன்வந்தாலும், அ.தி.மு.க. அரசு பிரேசில் நாட்டிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்குவதிலேயே ஆர்வமாக இருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. கொரோனா தொற்றைச் சமாளிக்கத் தமிழகத்தில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி – ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை சிகிச்சையளிக்க எவ்வித நடவடிக்கையும் இதுவரை தமிழக அரசு எடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் – கொரோனா தொற்றிற்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள இயலாமல் பெரும் அவதிப்படுகிறார்கள் என மாநிலம் முழுவதும் மருத்துவர்களிடமிருந்து எனக்கு வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.
எனவே, தடுப்பூசி விரயம் ஆவதை தடுப்பது, ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார், அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது, ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கத் தேவையானவை தட்டுப்பாடு இல்லாமல் – எங்கும் போதிய அளவில் கிடைத்திடச் செய்வது ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் தமிழக அரசு எடுத்திட வேண்டும்.
ஆய்வுக் கூட்டங்களையும், ஆலோசனைக் கூட்டங்களையும் ஆக்கபூர்வமாக நடத்தி மக்களை கொரோனா பேரிடரிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட்டிட வேண்டும்”என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
தமிழக ஆக்ஸிஜன் தட்டிப் பறிக்கப்பட்டது பற்றி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கருத்து வெளியிட்டுள்ளார்.
”தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலினை எந்தக் காரணத்திற்காகவும் ஏற்க முடியாது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.அதேபோல் கொரோனா தடுப்பூசியின் விலையை அவரவர் இஷ்டம்போல நிர்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது”என்று கூறியுள்ளார் தினகரன்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ‘தமிழகத்தில் இருந்து ஆக்ஸிஜன் வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது பற்றி மத்திய அரசிடம் கேட்போம்”என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், “தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலையில் இருந்து ஆக்ஸிஜன் வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. தற்போதைய தமிழகத்தின் ஆக்ஸிஜன் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. தமிழகம் எப்போதுமே அண்டை மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பி உதவி செய்தே வந்திருக்கிறது. கடந்த தொற்று காலங்களில் கூட நாம் பிற மாநிலங்களுக்கு உதவியிருக்கிறோம். ஆனால் இப்போது மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்திடம் போதிய ஆக்ஸிஜன் இருக்கிறது. எனினும் இந்த விவகாரம் பற்றி மத்திய அரசிடம் எடுத்துச் செல்வோம்”என்று கூறியுள்ளார் ஜெ. ராதாகிருஷ்ணன்.