அப்துல்கலாம் வழிகாட்டலால் கலைதுறையில் இருந்து கல்வி துறைக்கு மாறிய நடிகர் தாமு

கே.பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தின் மூலம் 1992ல் நடிகரானவர் தாமு. அதன்பின் இருபது ஆண்டுகள் முழுநேர நகைச்சுவை நடிகராக ஏராளமான படங்களில் நடித்தார். திடீரென அவரைத் திரைப்படங்களில் காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம்? என்பதைப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.

திரைப்படங்களில் இருந்து விலகி கடந்த பத்து ஆண்டுகளாக, நடிகர் தாமு கல்விச்சேவைஆற்றிவருகிறார். இதுமக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும் அரசாங்கத்துக்கு அது தெரிந்திருக்கிறது. இதனால்,கல்வித்துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது கிடைத்துள்ளது.

ஏப்ரல் 19, அன்று, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக காணொளி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித்துறையில் நடிகர் தாமு செய்த பங்களிப்புக்காக, அவருக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது

இந்த விருது பெற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக ஜேகே அறக்கட்டளை அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் நடிகர் தாமு, ஜேகே கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஜேகே மற்றும் இளம் விஞ்ஞானி ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்இந்த நிகழ்வில் நடிகர் தாமு பேசும்போது,

கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஐயாவைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் வருவதற்கு தாமதமான காரணத்தினால், என்னுடைய மிமிக்ரி திறமையை வைத்து சுமார் மூன்று மணி நேரம் கூடியிருந்த கூட்டத்தைக் கலகலப்பாக்கினேன். இதை அறிந்த அப்துல் கலாம், அந்த மேடையிலேயே என்னிடம், “நீ கல்விப்பணிக்காக உன்னைக் கொடுத்து விடு” எனக் கூறினார். உடனே சரி என கூறிவிட்டேன்.

அன்று ஆரம்பித்த பணி, இதோ பத்து வருடங்களைக் கடந்து, தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அப்துல் கலாம் ஐயா வகுத்த, கல்வி குறித்த பத்து கட்டளைகளை, மாணவர்களுக்குள் உருவேற்றி, அவர்களுக்குக் கற்பதில் இருக்கும் சிரமங்களையும் பயங்களையும் போக்குவதை என்னுடைய தலையாயப் பணியாக இப்போதுவரை செய்து வருகிறேன்.. ஒவ்வொரு மாணவனுக்கும், அவனுடைய ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒளிந்துள்ள ஆசிரியரையும் அவனுக்கு அடையாளம் காட்டுவது தான் எங்கள் பணியின் நோக்கம்.

எனது வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள், இன்று நல்ல பதவிகளில் இருப்பதாகச் சொல்லி என்னைச் சந்தித்துப் பேசும்போது, மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பில், மாற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கூறும்போது, அதையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக நினைத்துக்கொள்வேன். ஆனால் என்னுடன் இருந்தவர்கள் இதற்கான அங்கீகாரம் கிடைத்தால், இதுபோன்று இன்னும் பலர் இந்த கல்விப்பணியில் ஆர்வமாக இறங்குவார்கள் என என்னிடம் கூறுவார்கள். அந்தவகையில் தற்போது இந்த உயரிய விருது எனது பணிக்காகக் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அப்துல் கலாம் ஐயா அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

என்னிடம் கல்விப்பணியை ஒப்படைத்தது போல, அதற்கு முன்பாகவே என் நண்பன் விவேக்கிடம் பசுமையைப் பாதுகாக்கும் பணியை ஒப்படைத்தார் அப்துல் கலாம். விவேக்கும் முழுமூச்சாக, இயற்கையைப் பாதுகாக்கும் பணியில் இறங்கி, ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலட்சியமாகக் கொண்டு தீவிரமாக இயங்கி வந்தார். இப்போது அவர் நம்முடன் இல்லையென்றாலும், அவர் உருவாக்கிய பாதையில், தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் நடும் மரங்களின் மூலம் உயிருடன் தான் வலம் வருவதாகவே நான் நினைக்கிறேன். அதனால் அவர் துவங்கி வைத்த பணி நிற்காமல் தொடரும் என்பது உறுதி. அவர் ஒரு கோடி மரங்கள் நடுவதை தனது இலட்சியக் கனவாகக் கொண்டதைப் போல, நான் ஐம்பது இலட்சம் மாணவர்களுக்காகவது என்னுடைய சேவை சென்றுசேர வேண்டும் என்பதைஇலக்காகவைத்துள்ளேன்

இவ்வாறு அவர் பேசினார்

நடிகர் தாமு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவை (IPTSA) என்கிற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்இது ஒரு அரசு சாரா கல்விச் சேவை வழங்கும் அமைப்பு ஆகும்.

2011 முதல் 2016 வரை ஐந்து ஆண்டுகள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மேற்பார்வையில் செயல்பட்ட இந்த அமைப்பு  இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கவும், கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் முயற்சித்துவருகிறதுஎன்கிறார்
தமிழ் இளைஞர்களின் நலனுக்காக, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் ஒரு இலட்சம் பேராசிரியர்கள், மற்றும் 30 இலட்சம் பெற்றோர்களைக் கொண்ட இந்த அமைப்பின் மூலம் 20 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்துள்ளதாக கூறுகிறார் .

Related posts

Leave a Comment