தமிழ்நாடு முதல்சட்ட பேரவைக் கூட்டம் அறிவிப்பு

வரும் ஜூன் 21ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று (ஜூன் 9) மாலை அறிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். அப்போது, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து வரும் ஜூன் 21ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்பின் சட்டப்பேரவை அலுவல் கூட்டம் நடைபெறும். சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெறும், என்னென்ன பணிகள் என்பதை அதில் முடிவு எடுப்போம். ஜனநாயக முறையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் தொற்று இல்லை என்று முடிவு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது தளத்தில் கூட்டம் நடைபெறும். உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படும்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல் சம வாய்ப்பு வழங்கப்பட்டு ஜனநாயக முறையில் இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். அந்த அடிப்படையில்தான் இந்த கூட்டம் நடைபெறும். கேள்வி நேரத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்

Related posts

Leave a Comment