வடபழநி கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்த நபரை அடையாளம் காட்டாதது ஏன்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையின் இந்த முதல் மாதத்தில் அடிக்கடி செய்திகளில், இடம்பெற்ற அமைச்சர்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் முக்கியமானவர்.

கடந்த ஜூன் 7 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளியிட்ட அறிவிப்பும் மிக முக்கியமானது. திமுக ஆட்சி என்றால் இந்து கோயில்களை கவனிக்க மாட்டார்கள் என்ற பொதுவான ஒரு கருத்தை உடைக்கும் வகையில், வடபழனி முருகன்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 250 முதல் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டுவிட்டதாக ஜூன்7 ஆம் தேதிதான் அறிவித்தார் அமைச்சர் சேகர்பாபு.

அன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , “முதல்வரின் உத்தரவுப்படி சிதிலமடைந்திருக்கும் அனைத்து கோயில்களையும் புனரமைக்கும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான கலைஞர் நகரில் உள்ள 5.5 ஏக்கர் நிலங்கள் வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த இடம் மீட்கப்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை எடுக்க 48 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பதை இந்து சமய அறநிலையத்துறை ஒருபோதும் அனுமதிக்காது. யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என்று கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். சென்னை, வடபழனியில் புகழ் பெற்ற முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தங்கள் சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். அவற்றுள்ள் சென்னை சாலிகிராமம், காந்திநகரில், சர்வே எண்கள், 21/2, 23/1, 25/1, 26/1 ஆகியவற்றில், அமைந்துள்ள 5.52 ஏக்கர் நிலமும் உண்டு.

இந்த நிலத்தின் ஒரு பகுதியில் வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல் கட்டுவதற்காக மகளிர் மேம்பாட்டு கழகத்துக்கு மாதம் ஒரு லட்சம் வாடகை என்ற அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல இடத்துக்கான வாடகை கோயிலுக்கு முறையாக சென்று சேரவில்லை. கோயில் நிர்வாகம் பல முறை வலியுறுத்தியும், கோயிலின் தர்மகர்த்தாக்கள் என்ற தார்மீக பொறுப்பு மிக்க பெரியவர்கள் பலர் வலியுறுத்தியும் வாடகை வரவில்லை. அதுமட்டுமல்ல..அந்த மகளிர் ஹாஸ்டல் தவிர மீதியுள்ள இடங்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டன.

இந்த 5.5. ஏக்கரைதான் சேகர்பாபு அதிரடியாக மீட்டிருப்பதாக ஜூன் 7ஆம் தேதி அறிவித்திருக்கிறார். கோயில் சொத்துகளை மீட்டது மகிழ்ச்சி. ஆனால் இந்த கோயில் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருந்தது யார்? அவர்கள் யார் என்ற விவரங்களை அரசு ஏன் அறிவிக்கவில்லை? இப்படிப்பட்ட கேள்விகள் முக்கியமாய் வந்து முன் நிற்கின்றன.

இதுபற்றி வடபழனி கோயில் வட்டாரத்தில் விசாரித்தபோது
“வடபழனி கோயில் உபயதாரர்களில் முக்கியமானவர்கள் தினமலர்நாளிதழ்  உரிமையாளர்களின் குடும்பத்தார். ஆக்கிரமிக்கப்பட்ட வடபழனிகோயில் சொத்துகளை மீட்க வேண்டுமென்பதில் அவர்கள் மிகவும் ஆர்வம்காட்டி போராடி வந்தனர். இதற்காக கடந்த ஆட்சியில் முக்கியமானவர்களிடம் இந்த பிரச்சினையை அவர்கள் கொண்டு சென்றனர். அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முருகன் பெயரையே தன் பெயராய் கொண்டவர். அவரிடம் போய் வட பழனி முருகன் கோயிலின் சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அழுத்தமும் கொடுத்தனர். ஆனால் இதோ செய்கிறேன், அதோ செய்கிறேன் என்று சொன்னாரே தவிர எடப்பாடி அதில் பெரிய ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. அதேபோல போன ஆட்சியில் வலிமை மிகுந்த அமைச்சராக இருக்க கூடிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடமும் இந்த பிரச்சினையை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இருவரும் இந்த விவகாரம் பற்றி விசாரிக்கும்போதுதான் இந்த ஆக்கிரமிப்பு மேட்டரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளருமான தி.நகர் சத்யா இருப்பது தெரியவருகிறது. சென்னையில் தனக்கான ஆள் வேண்டும் என்ற காரணத்தால் எடப்பாடி இந்த விவகாரத்தில் சத்யாவை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. கோயில் உபயதாரர்கள், பக்தர்களின் அழுத்தத்தால் வேலுமணி இதுகுறித்து தி.நகர் சத்யாவிடமே பேசியிருக்கிறார். அதற்கு சத்யா, ‘அண்ணே… கோயமுத்தூர் விவகாரங்கள்ல நாங்க தலையிடுறதில்லை. இது மெட்ராஸ் மேட்டர். நீங்களும் தலையிடாம போங்கண்ணே…’ என்று சொல்லிவிட்டார். எனவே வேலுமணியும் அதன் பின் இந்த விவகாரத்துக்குள் தலையிடவில்லை.

இந்த நிலையில்தான் ஆட்சி மாறிய பிறகு திமுக ஆட்சியில் சேகர்பாபு துறை அமைச்சரானதும் இந்த ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன். இதில் என்ன வேடிக்கை என்றால் போன ஆட்சியில் ஆக்கிரமிப்பு புகாருக்கு ஆளான தி.நகர் சத்யாவை ஆட்சியாளர்கள் காப்பாற்றினார்கள். இப்போது சொத்துகளை மீட்டபோதும் யாரிடம் இருந்து மீட்கப்பட்டது என்பதை முறையாக அறிவிக்காமல் மேலும் ஒரு வகையில் தி.நகர் சத்யா காப்பாற்றப்படுகிறார். வடபழனி முருகன் கோயிலின் சொத்துகள் மீட்கப்பட்டது மகிழ்ச்சி. அந்த சொத்துகளை ஆக்கிரமித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால்தான் இந்த நடவடிக்கை முழுமை அடையும்” என்கிறார்கள்.

Related posts

Leave a Comment