அதிமுகவில் கொரடாவும் கொங்கு மண்டலத்துக்கா?

அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர், அதாவது எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க கடந்த

மே 10ஆம் தேதி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. அதில் பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் இடையேயான கடுமையான வாக்குவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஓபிஎஸ்ஸுக்கு வேண்டுகோள் வைக்கப்பட, அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

அப்போது ஏற்பட்ட சலசலப்பால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரைச் சந்தித்து அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாக ஆலோனை நடத்துகிறார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், திடீரென அதிமுக தலைவர்களுக்கு சட்டமன்றக் கட்சி துணைத் தலைவர், கொறடா பற்றிய கவலை ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் நேற்று (ஜூன் 9) முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்துக்குச் சென்று, ‘மே 14 ஆம் தேதி அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று மனு கொடுத்துள்ளார். ஊரடங்கு இருப்பதால் முறைப்படி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு கூட்டம் நடத்த வேண்டும் என்பதால் நேற்று டிஜிபி அலுவலகம் சென்றிருக்கிறார் ஜெயக்குமார்.எதிர்வரும் நாட்கள் அரசியலில் அதிமுகவுக்கு மிகவும் முக்கியமான நாட்கள் என்பதால்… சட்டமன்றக் கட்சித் துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளை அடைய அக்கட்சிக்குள் பலத்த போட்டி நிலவுகிறது.

துணைத்தலைவர் பதவியை ஓபிஎஸ் தான் ஏற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதற்காகவே அவர் ஓபிஎஸ்ஸுடன் பல்வேறு சமாதானப் பேச்சுகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் துணைத்தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டால் இரண்டாம் இடத்துக்கு மீண்டும் தான் சம்மதித்துவிட்டதாக ஆகிவிடும் என்று கருதி தொடர்ந்து மறுத்து வருகிறார் ஓபிஎஸ்.இதேநேரம் கொறடா, துணைத் தலைவர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள். விராலி மலையில் ஜெயித்த விஜயபாஸ்கர் தன் உடல்நிலையை காரணம் காட்டி சென்னை பக்கமே பெரிதாக தலைகாட்டவில்லை. ஜூன் முதல் வாரத்தில்தான் அவர் ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் முதன்முதலாகச் சந்தித்தார் அதிமுக ஆட்சியின்போது முக்கியமான இடத்தை வகித்த விஜயபாஸ்கர், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் முக்கிய இடத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அதனால் கொறடா, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவிக்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். டெல்டாவில் இருந்து ஜெயித்த முன்னாள் அமைச்சர் காமராஜும் சட்டமன்ற நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற காய் நகர்த்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் விஜயபாஸ்கரும், காமராஜும் இந்த கோரிக்கைக்காக எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்துப் பேசியுள்ளார்கள்.இவர்களின் தீவிரத்துக்கு இன்னொரு பின்னணி இருக்கிறது. கொறடா பதவிக்கு முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் முயற்சி செய்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் பத்துக்குப் பத்து தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் சட்டமன்ற நிர்வாகிகள் கோவை மாவட்டத்துக்குப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று அம்மாவட்ட அதிமுகவினர் விரும்புகிறார்கள். அதிலும் எதிர்க்கட்சித் தலைவர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், கொங்கு மண்டலத்தில் இருந்து கொறடா தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கவுண்டர் அல்லாதவராக இருக்க வேண்டும், எனவே பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று பொள்ளாச்சி வட்டார அதிமுகவில் பேசுகிறார்கள்.இந்த தகவல் அறிந்துதான், ‘ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கொங்குவுக்கு, கொறடாவும் கொங்குவுக்கா?’ என்ற கேள்வியோடு விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் சட்டமன்றக் கட்சி நிர்வாகப் பதவிகளைக் குறிவைத்து வேட்டையில் இறங்கிவிட்டனர். இதேநேரம் மனோஜ் பாண்டியனுக்கு சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் பட்டியலில் இடம் வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புகிறார். நாடார் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற அடிப்படையில் மனோஜ் பாண்டியனும் மட்டையை வீசிக்கொண்டிருக்கிறார்.

பொள்ளாச்சி ஜெயராமன், விஜயபாஸ்கர், காமராஜ். மனோஜ் பாண்டியன் ஆகியோரைத் தாண்டி டிடிவி தினகரனை ஜெயித்த கடம்பூர் ராஜூ, தங்கமணி உள்ளிட்டோரும் சட்டமன்ற நிர்வாகப் பதவிகளை குறிவைத்திருக்கின்றனர். சசிகலா என்ட்ரியை அடுத்து அதிமுகவில் ஏற்பட இருக்கும் பரபரப்பான சூழலில், சட்டமன்ற நிர்வாகிகளின் ரோல் முக்கியமாக இருக்கும் என்பதால் போட்டி பலமாகவே நடந்துவருகிறது.

Related posts

Leave a Comment