அதிமுக அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் ரத்து- மு.க.ஸ்டாலின்

மீத்தேன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. கடைசி நாளான இன்று (ஜூன் 24) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், முதல்வர் ஸ்டாலின் பதில் உரையாற்றினார்.

அப்போது, “நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான், இந்த அரசு. நான் அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு.

தமிழினத்தை நம்மால் தான் வளர்ச்சி பெற வைக்க முடியும் என மக்கள் நம்மை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள்” என்று பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பல்வேறு வழக்குகள் திரும்பப்பெறப்படும் என்று பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, “கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள்,

மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகள்,
எட்டு வழிச் சாலையை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகள்,
வேளாண் சட்டம், கூடங்குளம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார்.

சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என்றும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்ட முதல்வர், தமிழகத்தில் திருக்கோயில்களைப் புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் வட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க திண்டிவனம், செய்யாறு ஆகிய பகுதிகளில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்றும் அறிவித்தார்.

Related posts

Leave a Comment