தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்த 21 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், “உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சிக் கொள்கை மீது இந்த அரசு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநிலத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த அரசு புத்துயிர் அளிக்கும். 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு அனைத்து வகைகளிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர், கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் குறைந்த பின் இந்தத் தேர்தலை நடத்துவதற்கான உரிய நடவடிகைகள் மேற்கொள்ளப்படும்”என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலைப் பற்றி விவாதிப்பதற்காக நேற்று (ஜூன் 25) மாலை 5.10 மணிக்கு அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்தது
இந்தக் கூட்டத்தின் மையப்பொருளே உள்ளாட்சித் தேர்தல்தான் என்பதால், வேறு விவகாரங்களைப் பற்றி பேசவில்லை. கூட்டம் தொடங்கியவுடன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளாட்சித் தேர்தல் பற்றி அறிமுக உரையாற்றினார்.
அதன் பின் நகர நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பேசினார். “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் பல இடங்களில் வாக்காளர்கள் எண்ணிக்கை உட்பட பல விஷயங்களை மறு வரையறை செய்ய வேண்டியிருக்கிறது. வார்டுகளில் சிலவற்றில் 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. சில வார்டுகள் 5 ஆயிரம் ஓட்டுகளையே கொண்டுள்ளன. இன்னும் சில வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. இதையெல்லாம் ஒரே சீராக பிரித்து மறு வரையறை செய்த பிறகுதான் நகர் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார் நேரு.
அதன் பின் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பனை பார்த்த முதல்வர் ஸ்டாலின், “உங்க பகுதியிலதான் தேர்தல் நடத்தணும். நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்.
அதற்கு பெரிய கருப்பன், “இப்போது தேர்தலை நடத்தினாலும் நமக்கு 90% வெற்றி வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.
வேறு யாராவது பேசுகிறீர்களா என்று கேட்டதும் நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் எழுந்து, “தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தின் சில பகுதிகள் நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியத்தோட இணைந்திருக்கு. எங்க ஒன்றியத்தில் சில பகுதிகள் பாப்பாக்குடி ஒன்றியத்தோட போயிருக்கு. அந்தந்த ஒன்றியத்தோடு இந்த பகுதிகள் இருந்தால்தான் தேர்தலை சந்திக்க நன்றாக இருக்கும். இதுபோல் பல பகுதிகளிலும் கடந்த ஆட்சியில் மாற்றப்பட்டிருக்கு. அதை முறைப்படுத்திவிட்டு தேர்தலை நடத்தவேண்டும்” என்று கூறினார். அதை ஸ்டாலின் உன்னிப்பாக கேட்டுக்கொண்டார்.அதன் பின்னர் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசினார்.
“இப்போது நாம் ஆட்சி அமைத்திருக்கிறோம் என்றால் அந்த வெற்றிக்குக் காரணம் மாவட்டச் செயலாளர்களாகிய நீங்கள்தான். இதைவிட அதிகமான வெற்றியை நாம் உள்ளாட்சித் தேர்தலிலும் பெற வேண்டும். அதைத் தொடர்ந்து இன்னும் இரண்டாண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அதிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதெல்லாம் மாவட்டச் செயலாளர்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது.
சிலர் மீது புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். நாம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நம் மீது புகார்கள் குறைவாக இருந்தது. இப்போது ஆளுங்கட்சியாகிவிட்டோம். நம் மீது சிறு புகார் சொல்லப்பட்டால் கூட அதை ஊதிப் பெரிதாக்குவார்கள். எனவே கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடைபெறும். நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகளை முடித்த பின்னர்தான் முடிவு செய்வோம்” என்று பேசி முடித்தார் ஸ்டாலின்.
5.10 க்கு ஆரம்பித்த கூட்டம் 35 நிமிடங்கள் நீடித்து 5.45 மணிக்கு முடிந்துவிட்டது.
கூட்டம் முடிந்ததுமே அந்த ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்களுக்கு மாசெக்களிடமிருந்து தகவல்கள் பறந்தன. உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவதற்காக ஒன்றிய வரையறை, பெண்கள், தலித் வரையறை பற்றிய தகவல்களை ஒரு வாரத்துக்குள் ரிப்போர்ட்டாக தயாரித்து அனுப்பும்படி ஒன்றிய செயலாளர்களுக்கு ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.