அமேசான் வலைதளத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த வெப் தொடர் ‘த பேமிலி மேன்- 2 அத்தொடரில் இலங்கை இனப் போராட்டத்தையும், இலங்கைத் தமிழர்களைப் பற்றியும் பல தவறான, அவதூறான விஷயங்களை வைத்திருக்கிறார்கள் என தமிழர்களிடம் பெரும் சர்ச்சையும், கோபமும் எழுந்தது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக, நாம் தமிழர் கட்சி, மற்றும் பல தமிழர் அமைப்புகள், தமிழார்வலர்கள், இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோர் அத்தொடருக்கு எதிராக குரல் எழுப்பினர். அத்தொடரைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கும் வைத்தனர். அமேசான் வலைதளத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இலங்கைத் தமிழர்கள், இலங்கைத் தமிழர் கட்சிகள், அமைப்புகள் ஆகியவையும் அத்தொடருக்கு எதிராகவும், இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகேவுக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர்.
அப்படி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ள இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் புதிதாக ஆரம்பமாகியுள்ள ஒரு வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி இன்று முதல் நடித்து வருகிறார். இத்தொடரில் ஹிந்தி நடிகர் ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஏற்கெனவே, இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் போஸ்டர்களும் வெளியானது. அதற்கு உலகெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைக் கண்டு விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இப்போது மீண்டும் இலங்கைத் தமிழர்களை கோபமடைய வைத்துள்ள இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது சர்வதேச தமிழர்கள் மத்தியில் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்கிற விவாதம் கோடம்பாக்க சினிமாவில் நடக்க தொடங்கிவிட்டது.
தமிழ்த் திரைப்பட துறையில் முன்னணி கதாநாயகன், தெலுங்கு இந்திப்படங்களில் வில்லன் வேடங்களில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் விஜய்சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி இவர் பிற நடிகர்களுடன் இணைந்து நடித்தால் அந்தப் படத்தின் வணிக மதிப்பு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது ஒரு தமிழ் படத்தின் வியாபார மதிப்பில் 30% பங்கு உலகம் முழுவதும் வாழும் வெளிநாடுவாழ் தமிழர்கள் மூலம் கிடைக்கிறது அதனாலேயே தமிழ் படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமை உடனடியாக விற்பனை ஆகிறது இலங்கை தமிழர்களுக்கு எதிரான வலைத்தள தொடரை இயக்கிய இயக்குநர்கள் ராஜ்-டி.கே ஆகிய இருவர் சம்பந்தபட்ட அனைத்து படைப்புகளையும் புறக்கணிக்க வேண்டும் என்று வெளிநாடுவாழ் இலங்கை தமிழர்கள் தங்கள் அமைப்புகளில் ஏற்கனவே முடிவு எடுத்து அறிவித்துள்ளனர்
பேமிலிமேன் – 2 வலைதள தொடரில் நடிக்கவிஜய்சேதுபதியை ஒப்பந்தம் செய்ய அணுகியபோது அது நடைபெறாமல் போனது அத்தொடரின் மூன்றாம் பாகத்தில் விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டதாக ஏற்கனவே மின்னம்பலத்தில் குறிப்பிட்டிருந்தோம் அது இப்போது நடந்தேறியுள்ளது இதன் காரணமாக விஜய்சேதுபதி நடித்து வரும் தமிழ் படங்களின் வெளிநாட்டு விநியோக வியாபாரம் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் அவர் நடக்கும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் ஏற்பட்டுள்ளதை புறந்தள்ள முடியாது