தனது 30 வருட பத்திரிக்கைத் துறைப் பணி மற்றும் அனுபவத்தை தொடர்ந்து அருள் செழியன் முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம் “குய்கோ”. அருள் செழியன் 2016ம் ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை” திரைப்படத்தின் கதாசிரியராக பணியாற்றியவர் என்பது நினைவு கூறத்தக்கது. ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக இருந்ததோ அதே போன்று “குய்கோ” திரைப்படமும் ஒரு வித்தியாசமான காண்பனுவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருந்தது என்பதிலும் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்கான படமாக “குய்கோ” இருக்கின்றது என்பதிலும் படம் பார்த்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இயக்குநருக்கு பழைய தமிழ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது. தான் கதை எழுதிய திரைப்படத்திற்கு ஆண்டவன் கட்டளை என்ற பெயரை அவர்தான் சிபாரிசி செய்தாரா..? என்பது தெரியவில்லை. அல்லது அப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதால் சகுன ராசி என்று நினைத்தாரோ என்றும் விளங்கவில்லை. (ஆனால் படத்தைப் பார்த்தால் இயக்குநர் அப்படி எல்லாம் சகுனம் பார்க்கின்ற ஆள் போல் தெரியவில்லை) ‘குய்கோ’ என்றால் ’குடி இருந்த கோயில்’ என்று படத்தின் தலைப்பிற்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்திருந்தார். சரி ’குய்கோ’ என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்போம்.
அதாவது ‘குய்கோ’ சொல்ல வரும் கதை என்னவென்றால் படிப்பறிவு இல்லாமல் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மலையப்பனுக்கு ஒரு பெண் மீது காதல். அறிவின்மை, பணமின்மையால் காதல் படுகுழியில் தள்ளப்பட, அதிலிருந்து மீள நினைத்த மலையப்பன் மலை, கடல் தாண்டி செளதி-க்கு போகிறான். அவன் வாழ்விலிருந்து வறுமை வடியத் துவங்கும் நேரத்தில் அவன் தாய் இறந்து போக அவளின் இறுதிச்சடங்கிற்காக மீண்டும் இந்தியா வருகிறான். அவன் பெற்ற செல்வத்தால் இழந்த காதலை திரும்பப் பெற்றானா..? இல்லையா..? என்பதே “குய்கோ’வின் கதை.
இது கண்டிப்பாக ஒரு அற்புதமான கதை இல்லை. பார்த்துப் பழகிப் புளித்துப் போய் தமிழ் சினிமாவே கேட்டவுடன் முகத்தை திருப்பிக் கொள்ளும் அரத பழசான கதை தான். சரி திரைக்கதையிலாவது ஏதேனும் மாயாஞாலங்கள் இருக்குமா..? என்று கேட்டால் அப்படியும் எதுவும் இல்லை என்பதே பதில். அப்படியென்றால் இந்த குய்கோவில் வேறு என்னதான் இருக்கிறது என்று கேட்டால், இயல்பான மனிதர்களின் அன்றாட வாழ்க்கையும், அவர்களின் அறியாமையும், பணம் செழிக்கும் மனிதர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையும், மறைமுகமான அரசியல் நைய்யாண்டியும், வெடித்து சிரிக்க வைக்கும் நகைச்சுவையும், மிக இயல்பான நடிப்பும், நறுக்கென்ற வசனங்களும் தான் இந்த ’குய்கோ’வை சராசரி படத்தில் இருந்து விலக்கிக் காட்டுகின்றன.
காதலின் துயரத்தை மறக்க, கண் காணாத தேசத்திற்குப் போய் காசு பணம் சம்பாதித்துவிட்டு, தன் தாயின் இறுதிச் சடங்கிற்காக செளதியில் இருந்து இந்தியா திரும்பி வரும் மலையப்பன் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தி இருக்கிறார் யோகி பாபு. பணத்திற்காக தன்னிடம் நெருங்க நினைப்பவர்களிடமும், தன் பணத்தை அநாவசியமாக செலவு செய்பவர்களிடமும் நெடுந்தூரம் விலகியும், பண்பான மனிதர்களிடமும், எதிர்பார்ப்பின்றி படிப்பு சொல்லிக் கொடுக்கும் இன்னொரு நாயகனான விதார்த்திடமும் திட்டமிட்டு நெருங்கி அன்பால் அவர்களை திக்குமுக்காடச் செய்யும் கதாபாத்திரம். ஆரம்பத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த கெத்துடன் அனைவரிடமும் எடுத்தெறிந்து பேசுவதும், தாயின் மரணத்தை எண்ணி போலியாக கலங்கும் சகோதரிகளை கண்டித்தும், ஊர் கூடி அழ வந்த கிழவிகளை காசு கொடுத்து அழ வேண்டாம் என்று சொல்லியும் லந்தில் ராவடி செய்கிறார். மறுமுனையில் தன் தாய் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீஷர் பாக்ஸைப் பார்த்து தன் தாயின் நினைவில் கண்கலங்குவதும், ஊரில் படிக்காமல் சுற்றி அலையும் குழந்தைகள் படிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்வதும், காதலியின் வீட்டிற்குள் கெத்தாக நுழைவதும் என வசீகரிக்கிறார்.
வாழ்க்கையில் பெரிய இலக்கின்றி, பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இல்லாமல் போய், பொழுதுபோக்காக மாணவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கத் துவங்கிவிட்டு, காலத்தின் கட்டாயத்தால் யோகிபாபு இருக்கும் ஊரிலேயே சில காலம் தங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் கதாபாத்திரத்தில் விதார்த். தன் கதாபாத்திரத்தை விட மலையப்பானாக வரும் யோகிபாபுவின் கதாபாத்திரத்தைச் சுற்றி தான் மொத்த கதையும் நகர்கிறது என்பது தெரிந்திருந்தாலும் கூட, அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கதைக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் நியாயம் சேர்ப்பது போல் நடித்துக் கொடுத்திருக்கும் விதார்த்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நடத்திக் கொடுப்பதற்கான ஆட்களைப் பிடித்து அவர்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுத்து மேற்பார்வையிடும் நெறியாளராக வரும் இளவரசு, இப்படத்தின் மற்றொரு அற்புதமான கதாபாத்திரம். செய்யும் எல்லா வேலைகளிலும் தனக்கென்று ஒரு கமிஷன் எடுத்துக் கொண்டாலும் கூட,அடுத்தவர்களுக்கு உதவ வேண்டிய தேவையும் சூழலும் வரும் போது, முகம் கோணாமல் அவர்களுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதும், மலையப்பனின் தாயை மரியாதையுடன் அடக்கம் செய்ய முனைந்து, போலீஸாரிடம் சென்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்து வையுங்கள், என்ன வேண்டுமோ பார்த்துப் பண்ணிக் கொள்ளலாம் என்று பேசும் குசும்பும், மலையப்பன் தன் காதலியுடன் சேர வேண்டும் என்பதற்காக காய் நகர்த்தும் சாமர்த்தியமும், அப்பத்தா நடத்தும் பெட்டிக்கடையில் சோடா வாங்கிக் கொடுத்து, அது எதில் இருந்து எடுக்கப்பட்ட சோடா என்பது தெரிந்து வாந்தி எடுத்து அமர்களம் செய்வதும், கொக்கு குருவி சுடும் ஊசி மணி பாசி விற்பவர்களை கூட்டி வந்து மரியாதை செலுத்துவதும் என ஆங்காங்கே அதகளம் செய்கிறார்.
இந்த கதாபாத்திரங்கள் தவிர்த்து பொய் சொல்லாத புஷ்பா கதாபாத்திரமாக வரும் வினோதினி கதாபாத்திரம், நல்ல நோக்கத்துடன் மக்களுக்கு வட்டிக்கு பண உதவி செய்துவிட்டு போலிஸிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் பண்பாளன் கதாபாத்திரம், காலையில் மாலை முரசு வாங்கி வந்து கொடுக்கும் ஜெய்பீம் அப்புக்குட்டி கதாபாத்திரம், கோயில் சிலைகளை கொள்ளையடித்துக் கொண்டு திரியும் சேகர் – பாபு கூட்டணி, பெட்டிக் கடை நடத்தி வரும் அப்பத்தா கதாபாத்திரம், டப்மாஸ் செய்து கொண்டு அலையும் நாயகி கதாபாத்திரம், கணக்கு வராததால் பள்ளிக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டு அலையும் சிறுவர்கள் கதாபாத்திரம் என பல கதாபாத்திரங்கள் நம் மனதில் பசை போல் ஒட்டிக் கொள்கின்றன.
ஆடு மேய்ப்பவரை ஆண்டவராக ஏற்றுக் கொண்ட நீங்கள், மாடு மேய்ப்பவனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா…? அம்மான்னாலே மரியாதை தானடா..? டைம்ய உருப்படியா பாஸ் பண்ணீங்கன்னா லைஃப்ல எங்கயாது உருப்படியா பாஸ் பண்ணுவீங்கல்ல, வடிவேலு நல்லவன் தான், ஆனா நாந்தான் ஊருக்குள்ள ஒசத்தின்னு சொல்லிட்டு திரியுறானே, இந்த ஹோல்டன் விசா நயன் – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு தான குடுத்திருக்கணும்..” என கிடைக்கும் இடத்திலெல்லாம் இயக்குநர் வசனத்தில் சிக்சர் விளாசுகிறார்.
அந்தோணி தாசன் இசையில் மரண ஒப்பாரி வகைமையில் வரும் கிழவு அடவு பாடலும், யோகி பாபுவின் காதல் டூயட்டை ஹாலிவுட் ஷாருக்கான் ஸ்டைல் பாடல் மாடுலேஷனில் எடுத்த விதமும் சிறப்பாக இருந்தது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு இயல்பான ஒளியை ஒவ்வொரு ப்ரேமிலும் தெளித்து சில சம்பவங்கள் நம் கண் முன்னே இயல்பாக நடந்து கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
AST ப்லிம்ஸ் LLP நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. குடும்பத்தோடு சேர்ந்து எந்தவித தயக்கமும் இல்லாமல் பார்த்து வயிறு குலுங்க சிரிப்பதற்கான இந்த வாரத்திற்கான திரைப்படம் கண்டிப்பாக “குய்கோ” தான்.
தியேட்டருக்குச் சென்று கண்டிப்பாக பாருங்கள். ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்.
மதிப்பெண் 3.25 / 5