இரு குடித்தனங்கள் வசிக்கும் ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பில் இருக்கும் சிறிய பார்க்கிங் ஏரியாவில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பிரச்சனையால் இரு நல்ல மனிதர்கள் எப்படி மிக மோசமான மிருகங்களைப் போல் மாறுகிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு தவறை உணர்ந்து திருந்தினார்களா..? இல்லை அந்த ஈகோவிற்கு தங்களை பலி கொடுத்தார்களா..? என்பதை விறுவிறுப்புடனும் சுவாரஸ்யத்துடனும் பேசி இருக்கும் திரைப்படம் தான் “பார்க்கிங்”.
ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பின் கீழ் தளத்தில் 10 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அரசாங்க ஊழியர் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்). நகராட்சி அலுவலகத்தில் வி.ஏ.ஓ வாக பணிபுரியும் அவர் நேர்மைக்குப் பெயர் போனவர், அதே போல் தனக்கு இருக்கும் ஒற்றை மகளை செல்வ செழிப்புடன் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கின்ற கனவிற்காக சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து, பார்த்துப் பார்த்து செலவழித்து, அவர் கடைபிடித்து வரும் சிக்கனமே பல தருணங்களில் குடும்பத்தில் சிக்கலான கணங்களை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் அவர்கள் குடியிருப்பின் மேல்தளத்திற்கு காதலித்து, குடும்பத்தை எதிர்த்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்ட தன் காதல் மனைவியுடன் சேர்ந்து, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கல்யாண் குடிவருகிறார். தன் காதல் மனைவி இந்துஜாவிற்காக விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அன்போடு பார்த்துக் கொள்கிறார். இந்துஜா ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவரை அடிக்கடி பரிசோதனைக்காக ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்ல வேண்டி இருப்பதால், அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தில் ஒரு புதிய காரை வாங்குகிறார். அந்த காரை சிறியதாக இருக்கும் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்துவதில் இருக்கும் சிக்கல்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டு, அது இருவரின் ஈகோக்களை தூண்டிவிட்டு, நட்புடன் பழகிக் கொண்டிருந்த இரு வீட்டாரையும் எப்படி பரம எதிரிகளாகவும், பாவம் புண்ணியம் பற்றி யோசிக்காத பகுத்தறிவில்லாத மிருகங்களாகவும் மாற்றுகிறது என்பதை விவரிக்கிறது திரைக்கதை.
இளம்பரிதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு இன்றும் இளமையாகவே இருக்கிறது. நவரசங்களையும் முகத்தில் கொண்டு வந்து நடிக்கும் இவர் போன்ற சிறந்த குணச்சித்திர நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. எம்.எஸ்.பாஸ்கர் அந்த குறைவான நபர்களில் நிறைவானவர். ஒரு தகப்பனின் வாஞ்சையுடன் இந்துஜாவிடம் பேசுவதும், நேர்மையான அதிகாரியாக கறார் காட்டுவதும், தன் சிக்கனத்தைச் சொல்லி குறைபட்டுக் கொள்ளும் மனைவியை அதட்டி ஒடுக்குவதும், மகளிடம் பாசத்தில் உருகுவதும், தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் சிறிய ஒருவன் தனக்கு அறிவுரை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சீறுவதும், ஈகோ தலை தூக்கும் போது, வீம்புக்காக கார் வாங்குவதும், அவமானப்பட்ட வலி மற்றும் இயலாமையுடன் மகளிடம் கெஞ்சுவதும், கொஞ்சம் கொஞ்சமாக குரூரத்திற்கு பலியாகி எதிராளி பலியாக இருப்பதை வன்மத்துடன் மறைந்து இருந்து பார்ப்பதும், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கப் பார்ப்பதும், பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பதும் என காட்சிக்கு காட்சி நடிப்பில் விஸ்வரூபம் எடுக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். ஹாட்ஸ் ஆஃப் டூ ஹிம்.
ராட்ஸச நடிப்புக்கு சொந்தக்காரரான எம்.எஸ்.பாஸ்கருடன் ஒரே ப்ரேமில் இருந்து நடிப்பதற்கே பெரிய தைரியம் வேண்டும். இதில் அவருக்கு எதிரான கதாபாத்திரமாக நின்று அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பதற்கு அதை விட அசாத்திய துணிச்சலும் தைரியமும், தன் நடிப்பு மீதான நம்பிக்கையும் வேண்டும். அது கண்டிப்பாக ஹரிஷ் கல்யாணுக்கு நிறையவே இருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கருடன் கோதாவில் நேருக்கு நேர் நிற்க வேண்டிய தருணங்கள் வரும் போதெல்லாம் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக பழி வாங்கும் நோக்கத்துடன் அரசு அலுவலகத்திற்குச் சென்று அவரைப் பார்த்து வன்மத்துடன் சிரிக்கும் இடத்தில் ஆச்சரியப்படுத்துகிறார். காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் பட்டாஸாக வெடித்தாலும் அழும் காட்சிகளிலும் , எமோஷனலான காட்சிகளிலும் அனுபவமின்மை தெரிகிறது. இருப்பினும் அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அதை தூக்கி நிறுத்தும் இடத்தில் கண்டிப்பாக நடிகராக ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இவர்கள் இருவரைத் தவிர்த்து ஹரிஷ் கல்யாணின் மனைவியாக வரும் இந்துஜா காதல் கணவன் மற்றும் அப்பா ஸ்தானத்தில் இருக்கும் மனிதர் என இரண்டு நபர்களுக்குமான ஈகோவில் இடையில் இவர் மாட்டிக் கொண்டு தவிக்கிறார். தன் கணவனுக்காக எம்.எஸ்.பாஸ்கரிடம் போய் கெஞ்சும் காட்சியில் கலங்க வைக்கிறார். அதுவுமின்றி பிரசவ வலியில் தன் கணவருடன் போனில் பேசும் காட்சியில் உருக்கத்தை ஏற்படுத்துகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ரமாவும் மிரட்டி இருக்கிறார். கணவனை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் தன் மனதுக்குள் புழுங்குவதும், மிக்ஸி ஜாரில் உடைந்து போன ப்ளேடை சரி செய்து கொடுக்கச் சொல்லி போராடுவதும், வேறு வழியின்றி தேங்காய் சட்னிக்கு துருவிய தேங்காயை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, தக்காளி சட்னி செய்ய தயாராகும் இயலாமையில் ஒவ்வொரு வீட்டின் மனைவியையும் கண் முன் நிறுத்துகிறார். மேலும் கணவனாக தோற்றுப் போனாய், அப்பனாகத் தோற்றுப் போனாய், இப்பொழுது ஒரு மனிதனாகவும் தோற்றுப் போய்விட்டாய் என்று வெடிக்கும் இடத்தில் கச்சிதமாக ஸ்கோர் செய்கிறார்.
சாம் சி.எஸ் அவர்களின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு ஊடாக பூதாகரம் எடுக்கும் ஈகோவின் வளர்ச்சியை சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை துல்லியமாகக் கடத்தி மிரள வைக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சிகளின் பின்னணி இசை தண்டுவடத்தை ஜில்லிடச் செய்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அது போல் ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு காட்சிக்கு எது தேவையோ அதை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறது. ஒட்டு மொத்தக் கதையும் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் மட்டுமே நடக்கிறது என்கின்ற அயர்ச்சியே தெரியாத அளவிற்கு கேமரா கோணங்களும், கேமரா நகர்வுகளும் அமைந்து அடர்த்தியான கதை சொல்லலுக்கு பெரிதும் உதவி இருக்கிறது.
குறைகளாகப் பார்த்தால், ஆரம்பத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கும் ஹரிஷ் கல்யாணிற்கும் கட்டமைக்கப்பட்ட குணாதிசயங்கள் ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்தமாக காணாமல் போகும் தருணமும் அதனால் நிகழும் பின் விளைவுகளும் சுவாரஸ்யமானதாக இருந்தாலும் கூட இயல்பானதாக இல்லை. இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஈகோவும் சண்டையும் ஒரு கட்டம் வரைக்கும் இயல்பானதாகவும் பெரும்பாலான பார்வையாளர்கள் தங்களோடு பொருத்திப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. எப்பொழுது தான் யாருக்காக கார் வாங்கினோமோ அவர்களுக்கு கூட பயன்படாமல் காரை ஈகோவில் ஜெயிப்பதற்காக வீட்டிற்குள் நிறுத்தி வைக்கும் தருணத்திலும், பெற்றோரை எதிர்த்து தன்னை நம்பி வந்து தன் கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தன் ஈகோவை திருப்திப்படுத்திக் கொள்வதற்கான காரியங்களில் ஹரிஷ் இறங்கும் தருணத்தில் அக்கதாபாத்திரம் செத்துவிடுகிறது. இதே பிழை தான் எம்.எஸ்.பாஸ்கர் விசயத்திலும். தன் ஒட்டு மொத்த வாழ்க்கையை தன் பெண்ணின் பாதுகாப்பிற்காகவும், பெண்ணின் திருமணத்திற்காகவும் என்று எண்ணி வாழும் ஒரு தகப்பன், தன் சண்டையில் வெல்வதற்காக, தன் மகளை காவு கொடுக்கும் இடத்தில் அக்கதாபாத்திரம் மடிந்து மண்ணோடு கரைந்து போகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இயல்பான மனிதர்கள் இப்படி நடந்து கொள்ளமாட்டார்களே என்கின்ற எண்ணம் வரும் போது, பார்வையாளன் படத்தில் இருந்து விலகி தனியாளாக தன்னை உணரும் சாத்தியக் கூறுகள் அதிகமாகிவிடுகின்றன. இயல்பான கதைக்குள் புனைவு புகும் இடத்தில் பார்வையாளன் வெளியேறிவிடுகிறான். முடிவு எல்லா பார்வையாளரும் எதிர்பார்க்கும் ஒன்று தான், அந்த முடிவுக்கு பார்வையாளன் வந்து வெகுநேரம் கழித்தே திரைக்கதையும் திரை மாந்தர்களும் வந்து சேர்கிறார்கள் என்பது மற்றொரு குறை.
இவை தவிர்த்துப் பார்த்தால் ஒரு சிறு விசயத்தை எடுத்துக் கொண்டு அதை சிறப்பான திரைக்கதையின் மூலம் விறுவிறுப்பாக மாற்றி, என்னை நினைத்தாரோ அதை மிகச்சிறப்பாக திரைக்கும் கொண்டு வந்திருக்கும் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிக செலவீனங்கள் பிடிக்காத ஒரு கதையை முதல் படத்திற்கு தேர்வு செய்ததற்காகவும், அதை சமரசங்கள் ஏதும் இன்றி விறுவிறுப்பான திரைப்படமாக மாற்றி திரைக்கும் கொண்டு வந்து ஜெயித்திருக்கிறார் இயக்குநர். அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த வாரம் பரபரப்பான, விறுவிறுப்புடன் கூடிய ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் பார்வையாளர்கள் வீட்டிலிருந்து கிளப்பும் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டிய இடம், “பார்க்கிங்” திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்குகள் என்று சொல்வது மிகையற்ற உண்மை.
மதிப்பெண் 3.0 / 5