அன்னபூரணி சினிமா விமர்சனம்


பிறக்கும் போதே நாக்கின் சுவை முடிச்சிகளில் அதீத உணர்வுகளுடன் பிறக்கும் ஒரு பிராமணக் குழந்தையான அன்னபூரணி, அதே காரணத்தால் சுவை மீதும் உணவு மீதும் அதிக நாட்டம் கொள்ளுகிறாள். உணவு மீது கொண்ட நாட்டம் நாளடைவில் சமைப்பதிலும் திரும்ப, உணவு சமைத்துக் கொடுப்பது எவ்வளவு பெரிய தொண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளும் அன்னபூரணி இந்தியாவின் தலைசிறந்த செஃப் ஆக தான வருவேன் என்று உறுதி எடுக்கிறாள். சிறுமியாக இருக்கும் போது அவள் சமைப்பதற்கு ஆதரவும் அரவணைப்பும் காட்டிய குடும்பம், அவள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கப் போகிறேன் என்று வந்து நிற்கும் போது , தங்கள் குலத்தை காரணம் காட்டி அவளுக்கு தடை போடுகிறது. தன் குடும்பத்தை மீறி தன் இலட்சியத்தை அடைவதில் இருக்கும் தடைக்கற்களை மீறி அன்னபூரணி ஜெயித்துக் காட்டினாளா..? என்பதே இந்த “அன்னபூரணி” திரைப்படத்தின் கதை.

Naad Studios, Trident Arts மற்றும் Zee Studios இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் சீடரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சிறுமியாக இருக்கும் நாயகி இந்தியாவின் தலை சிறந்த செஃப் ஆக விரும்புகிறாள் என்று கதை தொடங்கும் போதே நாயகி நயன்தாராவாக இருப்பதால் க்ளைமாக்ஸ் காட்சியில் கண்டிப்பாக இந்தியாவின் தலை சிறந்த செஃப் ஆகிவிடுவார் என்கின்ற நம்பிக்கை பார்வையாளர்கள் அனைவருக்கும் வந்துவிடுகிறது. இருப்பினும் அந்த அக்ரஹார சிறுமி க்ளைமாக்ஸ் காட்சியில் இந்தியாவின் தலை சிறந்த செஃப் ஆகிறாள் என்கின்ற அந்த பயணத்தை அழகியலுடன், போதுமான சுவாரஸ்யத்துடனும், யூகிக்கக்கூடிய முடிச்சுகளுடனும், சிறப்பான் நடிப்புடனும் பரிமாறுவதால் கதையும் அதன் முடிவும் தெரிந்தும் கூட இந்த அன்னபூரணியை காட்சிக்கு காட்சி ரசிக்க முடியாவிட்டாலும் பெரும்பாலான காட்சிகளில் ரசிக்க முடிகிறது.

அன்னபூரணியாக நடித்திருக்கும் சிறுமி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் சின்ன சின்ன முகபாவனைகள் காட்சிக்குத் தேவையான உணர்வுகளை அற்புதமாக கடத்துகின்றன. அந்த சிறுமியின் நீட்சியாக வரும் நயன்தாராவிற்கு சமீபத்திய படங்களிலே சொல்லிக் கொள்ளும்படியான படமும், சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரமும் இதுதான் என்று சொன்னால் மிகையில்லை.

கச்சிதமாக ஏற்ற இறக்கங்கள் மற்றும் தெளிவு குழப்பங்களுடன் வார்க்கப்பட்டு இருக்கும் இந்த அன்னபூரணி கதாபாத்திரத்திற்கு நயன் உயிரூட்டி இருக்கிறார். அவருடைய வழமையான ஆண்கள் மனதை கொள்ளை கொள்ளும் அதே அதட்டல் மிரட்டல்களுடன் ஆங்காங்கே சிலரை கட்டிப் போடுவதில் தொடங்கி, எங்கே இந்த உலகுக்கே சமைத்துக் கொடுக்க வேண்டும் என்கின்ற கனவுகளுடன் இருக்கின்ற தன்னை, உறவுகளுக்கு மட்டும் சமைத்துக் கொட்டும் ஒரு சராசரி பெண்ணாக மாற்றிவிடுவார்களோ என்கின்ற குமைச்சலுடன் திருமண கோலத்தில் நின்று கலங்கும் இடத்திலும், வரக்கூடாத தருணத்தில் வந்த பாட்டியை சமாளிக்க வழியின்றி திக்கித் திணறி பதைபதைக்கும் தருணத்திலும், நான் தோற்றுப் போயிவிட்டேன், இது தானே உங்களுக்கெல்லாம் வேண்டும் என்று விரக்தி மனநிலையில் மருத்துவமனை பெட்டில் அமர்ந்து கொண்டு அழும் காட்சியிலும், ருசியான உணவை சமைக்க என்னென்ன வேண்டும் என்று சத்யராஜுக்கு க்ளாஸ் எடுக்கும் இடத்திலும் தாராவிடம் இருந்து க்ளாஸிக்கல் ஆக்டிங் வெளிப்படுகிறது.

நயனுக்கு அடுத்து நடிப்பில் அதிகமாக ஸ்கோர் செய்வதற்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம், இந்தியாவின் தலைசிறந்த செஃப் என்கின்ற பட்டத்துடன் வரும் ஆனந்தான சத்யராஜ் கதாபாத்திரம் தான். தன்னுடைய மகன் செய்த தவறுக்குப் பொறுப்பேற்று தன் வேலையை ராஜிநாமா செய்வதும், உண்மைக்கு உறுதுணையாக மகனை எதிர்த்து நிற்பதும், அடுத்தவர்களின் உழைப்புக்கு கிடைத்த பாராட்டுக்களை தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள நினைக்காமல் உழைத்தோருக்கு இடமளித்து ஒதுங்கி நிற்கும் மாண்பும், உன்னுடைய வெற்றி உன்னைப் போல் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, தடைகளைக் கண்டு தயங்கிப் போய் வீட்டில் அடைந்து கிடக்கும் பெண்களுக்கான வெற்றி என்று அன்னபூரணியை ஊக்கபடுத்துவதுமாக உற்சாகமான நடிப்பை படம் முழுக்கக் கொடுத்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் ஜெய்க்கு பல திரைப்படங்களில் ஹீரோயின் செய்த கதாபாத்திரம். அதாவது ஹீரோவுக்கு துணையாக இருந்து துவளும் போதெல்லாம் தோள் கொடுத்து ஊக்குவிக்கும் கதாபாத்திரம். தனக்கு நடிப்பதற்கோ, தன் கதாபாத்திரத்திற்கோ பெரிய ஸ்கோப் இல்லை என்று தெரிந்திருந்தாலும் தோழி தாராவிற்கு தோள் கொடுக்கும் அவரின் நட்பு பாராட்டுதலுக்குரியது. மேலும் ஒருதலையாக நயன்தாராவை காதலித்து தன் காதலைச் சொல்ல தைரியம் இல்லாமல் தயங்கும் காதல் காட்சிகள் வழக்கம் போல் ரசிக்க வைக்கிறது.

நயன்தாராவின் அப்பாவாக நடித்திருக்கும் அச்சுத்குமாருக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் மடப்பள்ளியில் மிகவும் புகழ் பெற்ற அக்கார வடிசல் தயாரித்து பக்தர்களுக்கு அதை பிரசாதமாகக் கொடுக்கும் பணி. அவரிடம் இருந்து தான் அன்னபூரணிக்கு சமையல் கலை மீது காதல் வருகிறது. சிறுவயதில் குழந்தை ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்ற நினைக்கும் சராசரி தகப்பனாகவும், அதே குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வேண்டும் என்று நிற்கும் போது, குலம் கோத்திரம் எல்லாம் தன்னை பழிக்கும் என்கின்ற பயத்தில் மகளின் கனவிற்கு தடை போட்டு அவளுக்கு அவசர திருமணம் செய்ய முயலும் சராசரி தகப்பனாகவும், தன்னை மீறி சென்ற மகளை சபிக்கும் சராசரி தகப்பனாகவும், தன் மகளின் வெற்றியைக் கொண்டு தன் மீது விழுந்த களங்கத்தை துடைக்க முயலும் சராசரி தகப்பனாகவும் இறுதிக்காட்சியில் தன் மகளின் வெற்றியைக் கண்டு, அவளை சபித்ததை எல்லாம் நினைவு கூர்ந்து கண்கலங்கி அழும் சராசரி தகப்பனாகவே நின்று போகிறார்.

பாட்டியாக வரும் சச்சு ஒரு வசனம் பேசினாலும் அது ஒட்டு மொத்த திரைப்படத்தின் திருவசனமாக அமைந்திருக்கிறது. “உன்னோட எதிர்காலத்தை காட்டுற கண்ணாடி நாந்தாண்டி, கிளம்பு” என்று தன் பேத்தியை உற்சாகப்படுத்தும் இடத்தில் ஒட்டு மொத்த தியேட்டரும் உற்சாகத்தில் ஆர்பரிக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் உள்ளுர்கார சமையல் மாஸ்டராக வந்து நாயகிக்கு உணவு சமைப்பதும் பரிமாறுவதும் எப்படிப்பட்ட தொண்டு என்பதை உணர்த்திச் செல்கிறார். மற்றொரு ஷெஃப் ஆக வரும் கார்த்திக் குமார் கதாபாத்திரம் தான் ஒட்டுமொத்த படத்தில் வீக்கான கதாபாத்திரம், என்ன செய்வார் என்று நினைக்கிறோமோ அதை மட்டுமே செய்து போகிறார். இவர்கள் தவிர்த்து ரெட்டின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி போன்றோர் கதைக்கு தேவைப்படவே இல்லை.

உணவு தொடர்பான திரைப்படத்தில் உணவு அரசியலைப் பேசியதும், அக்ரஹாரத்தில் அக்கார வடிசல் செய்யும் மாமி கதாபாத்திரத்தை, தொழுகை நடத்தி பிரியாணி செய்ய வைக்கும் காட்சியை படமாக்கிய துணிச்சலுக்காகவும், துலுக்க நாச்சியார் கதையை வலுக்கட்டாயமாக திணிக்காமல் கதை சார்ந்து கதைக்கு தேவைப்படுகின்ற இடத்தில் சேர்த்த சாமர்த்தியத்திற்காகவும் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ஆனால் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் கச்சிதமும் நீட்னெஸும் போட்டி போட்டுக் கொண்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தரை போல் பளபளக்கிறது.

மொத்தத்தில் அன்னபூரணி பரிமாறுவது அன்பும் அக்கறையும் அரசியலும் கலந்த ஆரோக்கியமான அறுசுவை உணவு. உப்போ, காரமோ கொஞ்சம் குறைவாக இருக்கலாம் இருந்தாலும் அன்னபூரணி குடும்பத்தோடு கண்டு களிப்பதால் மனம் கண்டிப்பாக குளிரும்.

அன்னபூரணி – சமைக்கும் பெண்களின் சாதனையை கண்டு களியுங்கள்.

மதிப்பெண் 3.0 / 5.0

Related posts

Leave a Comment