நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் மார்ச் 8 அன்று 75 திரைகளில் வெளியாகிறது!
பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் இந்த வெள்ளியன்று (மார்ச் 8, 2024) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு சித்தார்த் நாயகனாக நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
எஸ். ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ் மூலம் 75 திரையரங்குகளில் வெளியாகிறது ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம். இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்தும் பாசிட்டிவாக பேசும் படம்தான் இது.
தயாரிப்பாளர் எஸ்.பிரதீப்குமார் கூறும்போது, ”எஸ். ஹரி உத்ரா அவர்கள் இந்தப் படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி, இந்தப் படத்தை வெளியிட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள எங்களின் நோக்கம், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு கண்ணியமான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்தப் படத்தை உருவாக்குவதற்குப் பெரிய தூணாக இருந்த இயக்குநர் பிரசாத் ராமர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், குறிப்பாக எஸ். ஹரி உத்ராவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரண் கதாநாயகியாக இதில் நடித்துள்ளார். சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை திறமையாக வடிவமைத்துள்ளார். படத்திற்கான இசை மற்றும் பாடல்களை உருவாக்கிய அதே நேரத்தில் பிரதீப் குமார் இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார். ஒளிப்பதிவாளராக உதய் தங்கவேல் பணியாற்றி இருக்க, படத்தொகுப்பாளராக ராதாகிருஷ்ணன் தனபால், கலை இயக்குநராக விஜய் ஆதிநாதன், டிஐ வண்ணக்கலைஞராக அமர்நாத், டைட்டில் சிஜி கலைஞராக சதீஷ் சேகர், இஸ்குவேர் மீடியா ஓப்பனிங் கிரெடிட்ஸ் அனிமேஷன் செய்துள்ளனர். தலைப்பு மற்றும் போஸ்டர் வடிவமைப்புக்கு யாதவ் ஜே.பி, ஒலிக்கலவைக்கு ஜி.சுரேன் பணியாற்றி உள்ளனர். ஜி.சுரேன் மற்றும் அழகியகூதன் ஆகியோர் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர்.