ஆலகாலம் – திரை விமர்சனம்

கிராமத்து ஏழைத்தாயின் ஒரே மகனான நாயகன் ஜெயகிருஷ்ணா சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். படிப்பு முடிந்ததும் தங்களது நிலை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயகிருஷ்ணாவின் தாய் ஈஸ்வரி ராவ்.

இதற்கிடையே ஜெயகிருஷ்ணாவின் நேர்மையான கேரக்டர் பார்த்து சக மாணவி சாந்தினி காதலாகிறார். சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக் கொள்கிறார். தாயிடம் அப்புறம் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் திருமணமும் செய்கிறார்.
இதன்பிறகு ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. இதனால், ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை நெகிழ்ச்சி பொங்க சொல்வது தான் இந்த ‘ஆலகாலம்’.

நாயகனாக ஜெய கிருஷ்ணமூர்த்தி, கதாபாத்திரமாக மாற ஆரம்பத்தில் தடுமாறினாலும், போகப்போக கதையின் நாயகனாக தன்னை நிலைநிறுத்தி விடுகிறார். குடிக்கு அடிமையான பிறகு இவரது நடிப்பு வேறு லெவல்.

நாயகியாக வரும் சாந்தினி தன் கேரக்டரை உணர்ந்து காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்..
ஈஸ்வரிராவின் அந்த அம்மா கேரக்டர் வலிமை மிக்கது. அதை உணர்ந்து அவரும் அந்த பாத்திரத்தில் நிறைகிறார். மகனுக்கு மது வாங்க டாஸ்மாக்கை நோக்கி அடியெடுத்து வைக்கும் காட்சியில் அந்த தாயுள்ளத்தின் மவுனக் கொந்தளிப்பு நம் இதயம் வரை ஈட்டியாய் பாய்கிறது.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த வில்லன் கேரக்டரில் தங்கதுரை பளிச்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும் பலம்.

ஆரம்பத்தில் மெதுவாக போகும் கதை போகப்போக டாப் கியரில் எகிறத் தொடங்குகிறது. நாயகனே இயக்கமும் என்பது இந்த படத்துக்கான வரம் என்ற தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் கொடிய விஷமான ஆலகாலத்தை தனது படைப்பால் அமுதமாக்கியிருக்கிறார், இயக்குனர்.

Related posts

Leave a Comment