மலேசியாவில் பெரிய தொழிலதிபராக இருக்கும் விஜய் ஆன்டனி தனது சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறார். 35 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். இதற்கிடையே துக்க நிகழ்வு ஒன்றில் உறவுக்கார பெண் மிருணாளினி கண்ணில் பட, அப்போதே காதல் . அதேவேகத்தில் அந்த பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரியாமலலே அவள் பெற்றோரிடம் பேசி திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது.
திருமணமான மறுநாளே மிருணாளினி, ‘எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. சினிமாவில் ஹீரோயின் ஆவதுதான் எனது லட்சியம்’ என்று குண்டை தூக்கிப்போட… மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மனைவியை ஹீரோயினாக வைத்து, சொந்தப் படம் தயாரிக்கிறார் விஜய் ஆன்டனி. அதோடு, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்தப் படம் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.
.ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்கும் கதையில் தன்னால் என்ன முடியுமோ அதை மட்டும் தந்துள்ளார் விஜய் ஆண்டனி. மனைவியின் நடிப்பு விருப்பம் தெரிய வந்தபிறகு விக்ரம் என்ற பெயரில் அவர் மனைவியிடமே முகம் தெரியாமல் நடிப்பதெல்லாம் நடிப்பில் வேறு லெவல்.
இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் மிருணாளினி ரவிக்கு இதுதான் நடிப்பில் முதல் படம். கதை தன்னைச் சுற்றி நகர்கிறது என்பதை உணர்ந்து கேரக்டராகவே தன்னை மாற்றிக்கொண்டிருப்பதில் சிறந்த எதிர்காலம் தெரிகிறது. தனது லட்சியம் திருமணத்தால் சிதைக்கப்படும்போதும், கணவனை பார்வையால் வெறுக்கும்போதும் திரை தாண்டித் தெறிக்கிறது நடிப்பு.
இவரது கலைக்கூட்டணியில் சாரா காமெடியில் அதகளப்படுத்துகிறார். போதாக்குறைக்கு யோகிபாபு, விடிவி. கணேஷூம் சிரிப்பை சிதற வைக்கிறார்கள். தொடக்கத்தில் வரும் இளவரசு-சுதா சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்பின் உச்சம்.
இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கிறார். மனைவியின் லட்சியத்தை நிறைவேற்றுகிற கணவன் கதை நிறைய வந்திருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசம் காட்டி ரசிக்க வைக்கிறார். பரத் தனசேகர் இசையில் பாடல்கள் ரசனை. பருக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவு சிறப்பு.
ரோமியோ, சம்மர் ஸ்பெஷல்.