”சூரி – உண்மையிலேயே எனக்கு அண்ணன் தான்” – சிவகார்த்திகேயன்

நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார்.

மே 31 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் K.குமார், இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, ரோஷினி ஹரி ப்ரியன், பிரிகிடா, ரேவதி ஷர்மா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன், கலை இயக்குநர் துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ, திரைப்பட விநியோகிஸ்தர் பைவ் ஸ்டார் K. செந்தில், பாடலாசிரியர்கள் சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 

சிவகார்த்திகேயன் பேசுகையில்,

” படத்தின் முன்னோட்டம், பாடல் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. இப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கிச்சட்டை’ ஆகிய படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு புன்னகையுடன் தான் வேலை செய்வார். யாரையாவது திட்ட வேண்டும் என்றாலும் கூட சிரித்துக் கொண்டே தான் திட்டுவார். அவரின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் கருடன் திரைப்படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அவர் என்னை சந்தித்து முதல் முதலாக கதையை சொன்ன போது.. நான் உதவி இயக்குநராக பணியாற்றியதால் … என்னிடமிருந்த சில கதைகளை அவரிடம் சொல்லி இருக்கிறேன். வேறு யாரிடமும் கதையை சொல்லவில்லை. ஏனெனில் அவருடன் பேசும்போது ஒரு சௌகரியமான சூழலை ஏற்படுத்தி தருவார். வடிவுக்கரசி அம்மா குறிப்பிட்டது போல் எப்போதும் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதில் செந்தில் குமார் கவனமாக இருப்பார். அந்த விசயத்தில் அவரை யாராலும் வெல்ல முடியாது.

படத்தின் தயாரிப்பாளர் குமார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். அப்போதே அவர் படப்பிடிப்பு பணிகள் எதிலும் தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். சிக்கனமாக செலவு செய்வார். தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்ற போதே அவர் சிக்கனமாக செலவு செய்தார் என்றால்.. இப்போது அவரே தயாரிப்பாளர் என்பதால், இந்த படத்திலும் நல்ல முறையில் தயாரித்திருப்பார்.. இந்த படம் வெற்றி அடைந்து மேலும் அவர் படங்களை தயாரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சூரியை வைத்து அவர் மேலும் பல படங்களை தயாரிக்க வேண்டும்.

சூரி – உண்மையிலேயே எனக்கு அண்ணன் தான். அவரை எப்போதும் ஆத்மார்த்தமாக அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை எப்போதும் ஆத்மார்த்தமாக தம்பி என்று தான் அழைப்பார். இது சினிமாவை கடந்த நட்பு.

சூரியை முதன்முதலாக கதையின் நாயகனாக நீங்கள் நடிக்கலாம் என்று சொல்லி, அதற்காக அவரிடம் கதையும் சொன்னது நான்தான். ‘சீம ராஜா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது கிடைத்த இடைவெளியில் நீங்கள் ஏன் கதையின் நாயகனாக நடிக்க கூடாது? என கேட்டேன். அப்போது அதற்கு சிரித்துக் கொண்டே மறுப்பு தெரிவித்தார்.

அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து ‘தம்பி! வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன்’ என்றார். உடனே வாழ்த்துக்கள் தெரிவித்தேன். வெற்றிமாறன் படத்தில் நடித்தால்… உங்களது திரையுலக பயணத்திலேயே பெரிய திருப்புமுனை ஏற்பட்டுவிடும். பேசாமல் நடித்து விடுங்கள் என்று சொன்னேன். அப்போது படத்தின் கதை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் சூரியின் நடிப்பு திறமை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில் அவருடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவருடன் நிறைய நேரம் செலவழித்து இருக்கிறேன்.

காமெடியாக நடிக்கும் ஒருவரால் நிச்சயமாக உணர்வுபூர்வமாக நடிக்க முடியும். இதனால் காமெடியாக நடிக்கும் நடிகர்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இதற்கு சிறந்த உதாரணம் சூரி அண்ணன்.

வெற்றிமாறன் அண்ணன் சூரிக்கு ‘விடுதலை’ படத்தின் மூலம் புதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறார். நாங்கள் தயாரித்திருக்கும் கொட்டுகாளி படத்தில், சிறிதளவு கூட குறையாமல் அதற்கு ஒரு படி மேலே தான் சூரியை பயன்படுத்தி இருக்கிறோம் என நான் நம்புகிறேன்.

இந்த கருடன் திரைப்படத்தில் சூரி ஆக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். அவர் ஆக்சன் காட்சிகளில் நடிப்பது புதிதல்ல. ஏனெனில் எப்போதும் அவர் உடற்பயிற்சி உடற்பயிற்சி என அந்த மனநிலையில் தான் இருப்பார். அதனால் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்கு அவர் எப்போதோ தன்னை தயார் படுத்திக் கொண்டு விட்டார். இப்போது அவரை தேடி அதற்கான கதைகள் வந்து கொண்டிருக்கிறது. இப்போது நடிகர் சூரி ‘இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன்’ என்பதில் தெளிவாக இருக்கிறார். நிறைய நேரம் இன்ஸ்டாகிராமில் தனக்கான கதாநாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

நானும் சூரியைப் போல் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு விரைவில் சாத்தியமாகும் என நம்புகிறேன்.

‘கருடன்’ திரைப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ரசிக்கும் வகையிலான ரூரல் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக இது இருக்கும் ” என்றார்.

 

Related posts

Leave a Comment