மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். இதனால் மீனாவை அவரது வருங்கால கணவரான பாண்டியும், (சூரி) அவரது குடும்பத்தினரும் ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துப் போகிறார்கள்.
அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் நாயகி அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருந்ததா, இல்லையா? இதற்கான விடையே ‘கொட்டுக்காளி’.
காலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி மாலையில் இன்னொரு இடத்தில் போய் இறங்குவது தான் கதை. மொத்தக் கதையையும் பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் எழுதி விடலாம்..
அந்த சிறிய ஆட்டோ பயணத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் செயல் பாடுகளை இயல்பை மீறாமலும் எந்தவித சமரசமும் இல்லாமலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். கிராமங்களில் நிலவும் ஆணாதிக்கம், மூடநம்பிக்கை, பெண் வீட்டார் மீது மாப்பிள்ளை வீட்டார் செலுத்தும் அதிகாரம் என படம் போகிற போக்கில் பல விஷயங்களை வசனங்கள் வழியே தொட்டுச் செல்கிறது.
படத்தின் பெரிய பலம் அதன் நடிகர்கள். சூரி, அன்னா பென் தவிர மற்றவர்கள் அறிமுகங்கள். எனினும் படத்தில் நடித்த அனைவருமே மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். தொண்டையில் பிரச்சினை இருக்கும் நபராக படம் முழுக்க கரகரத்த குரலில் பேசுவது, குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக காட்டும் அதிகாரமும் என ஒவ்வொரு காட்சியிலும் சூரியின் நடிப்பின் வீரியம் கூடிக்கொண்டே போகிறது.
அன்னா பென்னுக்கு படத்தில் ஒரே ஒரு வசனம் மட்டும் தான். மற்றபடி வசனமே இல்லாமல் வெறித்து பார்த்தபடி மிரட்டலான நடிப்பை வழங்கி அந்த கேரக்டர் தரும் பயத்தை நமக்குள் கடத்தி விடுகிறார்.
படத்தில் இசை இல்லாதது நமக்கு இசைவில்லாதது. ஆனால் அந்த குறை தெரியாமல் சக்தியின் கேமரா வழியிலான காட்சிகள் நம் கண்களை இட்டு நிரப்பி விடுகிறது.
கிளைமாக்சில், அந்த முடிவே இல்லாத முடிவு கமல் போன்ற அறிவு ஜீவிகளுக்காக வைக்கப்பட்டது போல் தோன்றுகிறது. இது விஷயத்தில் படம் பார்க்கும் பாமரர்களை பற்றி இயக்கனர் வினோத்ராஜ் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.
விருதைக் குறிவைத்த எடுக்கப் பட்டிருப்பதால் காட்சிகள் ஏகத்துக்கும் நீ…ளம். என்றாலும் விருதுப் படம் என்பதால் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் நிச்சயம் படத்தை கொண்டாடுவார்கள்.