வாழை விமர்சனம் 4.25/5.. வாழை இலை விருந்து

கதை…

1990-களில் நடந்த காலகட்ட கதை இது.

பொன்வேல் மற்றும் ராகுல் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் நெருங்கிய தோழர்கள்.. இதில் பொன்வேல் ரஜினி ரசிகன். ராகுல் கமல் ரசிகன்..

இவர்கள் படிக்கும் பள்ளியில் டீச்சராக பணிபுரியும் நிகிலா மீது பொன்வேலுக்கு இனம் புரியாத நேசம் ஏற்படுகிறது.. பள்ளி இல்லாத நாட்களில் பொன்வேல் மற்றும் ராகுல் இருவரும் வாழைத்தார்களை சுமக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

வாழைத்தார்களை சுமப்பது கடினமாக இருப்பதால் ஒரு நாள் காலில் முள் குத்தி விட்டதாக பொய் சொல்லிவிட்டு மாடு மேய்க்க செல்கிறான் பொன்வேல்.

அப்போது பொன்வேலின் அம்மா மற்றும் அக்கா இருவரும் வாழைத்தாரை சுமக்கும் பணிக்கு செல்கின்றனர்.

பொன்வேல் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக செல்லும் டீச்சர் நிகிலாவுடன் மாவு அரைக்க செல்கிறான்.. மாலையில் பொன்வேல் வந்து திரும்பி பார்க்கும் போது மாடு காணாமல் போய்விடுகிறது..

அதன் பிறகு என்ன நடந்தது? காணாமல் போன மாடு திரும்பி வந்ததா? அம்மாவிடம் என்ன சொன்னான்? டீச்சர் மீது கொண்ட நேசம் என்ன ஆனது? வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்…

 தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த குழந்தை நட்சத்திரம் பொன்வேல்.. இவனுக்கு விருதுகள் நிச்சயம்.. ரஜினி ரசிகனாகவும் கவனிக்க வைக்கிறான்.. டீச்சர் நீங்க ரொம்ப அழகு என்று இவன் சொல்லும்போதெல்லாம் ரசிக்க வைக்கிறான்.. டீச்சர் சொன்னதை கேட்பதா அம்மா சொன்னதை கேட்பதா என தடுமாறும் காட்சிகளில் நம்மையும் தடுமாற வைக்கிறான்..

பொன்வேலி நண்பனாக வரும் ராகுல் கமல் ரசிகனாகவும் கவருகிறான்.. நானெல்லாம் கமல் ரசிகன்.. முள்ளு குத்தாமலேயே நடிப்பேன் என்று உதார் விடும்போது உலக நாயகனை நினைவுப்படுத்துகிறார்..

பொன்வேலின் அம்மா ஜானகி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த அம்மா.. இனி இவருக்கு கேரக்டர்கள் நிறைய வரும் என எதிர்பார்க்கலாம்.. அதுபோல பொன்வேலின் அக்காவாக வரும் திவ்யா துரைசாமி வாழைத்தார் சுமக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.. அம்மாவிடம் பணிந்து போவதும் தம்பியுடன் கொஞ்சம் அகட்டி அழகாக பேசுவதும் என ஒவ்வொரு சீனிலும் திவ்யா அழகு..

திவ்யாவுக்கும் கலையரசனுக்கும் உள்ள சின்ன காதல் காட்சிகள் மனதை விட்டு நீங்காதவை.. தொழிலாளர்களுக்காக போராடும் வாலிபனாக கலையரசன் கவர்கிறார்.

பூங்கொடி டீச்சர் போல ஒருவர் இருந்தால் பள்ளிக்கு லீவு போடாமலே செல்லலாம் என்ற ஏங்க வைக்கிறார் நிகிலா விமல்.. அவர் பேசும் நெல்லை மொழி கூட அழகுதான்..

புரோக்கர் பத்மன்.. வியாபாரி ஜெ சதீஷ் உள்ளிட்டோரும் தங்களது நடிப்பில் கனமான அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…


தன் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தையும் பள்ளி பருவ காலங்களையும் வாழை சுமந்த வாழ்க்கையும் உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.. இந்த படத்தை இவரது மனைவி திவ்யாவுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

மாரி செல்வராஜின் மாறாத காயத்திற்கு மருந்து போடும் உணர்வாய் கொடுத்திருக்கின்றனர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.. இவர்களின் பங்களிப்பு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது.

ஜாதி குறியீடுகளை மாரி செல்வராஜ் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்..

நெல்லை மாவட்ட வட்டார வழக்கு… வெள்ளந்தி மனிதர்கள்.. வில்லங்க வியாபாரிகள்.. ஆண்கள் பள்ளி அழகான டீச்சர்.. வாழைத்தோப்பு… என ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து வாழை இலையில் விருந்து படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்..

Related posts

Leave a Comment