கதை…
ஆடுகளம் நரேன் & பவன் இருவரும் அண்ணன் தம்பிகள்.. இருவருக்கும் ஒரே தந்தை என்றாலும் வெவ்வேறு தாய்.. மூத்த தாரத்தின் மகன் நரேன்.. இரண்டாம் தாரத்தின் மகன் பவன்.. எனவே இவர்களுக்கு எப்போது மோதல் இருந்து வருகிறத.
இந்த சூழ்நிலையில் இவர்களின் தந்தை சென்னையில் மரணமடைந்து விடுகிறார்.. இதனால் தந்தைக்கு நான்தான் கொள்ளி வைப்பேன் என இருவரும் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.. பிணத்தை தங்கள் இடத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் வாக்குவாதம் செய்கின்றனர்..
இவர்களின் தந்தை உடலை அமரர் ஊர்தியில் திருநெல்வேலிக்கு எடுத்து வருகிறார் விமல்.. நீ இந்த உடலை ஒழுங்காக கொண்டு சேர்த்தால் நீ கேட்ட பணத்தை தருகிறேன் என முதலாளி சொல்லவே வேறு வழியின்றி மனைவியின் பிரசவத்திற்கு கூட அருகே நிற்காமல் பிணத்தை தனியாக எடுத்து செல்கிறார் விமல்.
செல்லும் வழியில் தெருக்கூத்து கலைஞர் கருணாஸ் லிப்ட் கேட்டு ஏறி கொள்கிறார்.. மேலும் ஒரு காதல் ஜோடியும் இவர்களின் வேனில் தஞ்சம் அடைகிறது.. இதனால் பல பிரச்சினைகளை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார் விமல்.
இந்த சூழ்நிலையில் வரும் வழியில் யாரோ சிலர் பிணத்தை திருடி செல்கின்றனர் அதன் பிறகு என்ன நடந்தது? பிணத்தை திருடியவர்கள் யார்? விமல் என்ன செய்தார்? அவரது மனைவிக்கு பிரசவம் நல்ல முறையில் நடந்ததா? வில்லன் கோஸ்டிகள் என்ன செய்தனர் என்பதுதான் மீதிக்கதை..
நடிகர்கள்…
நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, நாயகி மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
கதையின் கதாபாத்திரமாகவே விமல் மற்றும் கருணாஸ் இருவரும் மாறி மாறி போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.. விமலுக்கு வடசென்னை மொழி வரவில்லை என்பதால் யாரோ ஒருவர் டப்பிங் கொடுத்திருக்கிறார் போல ஆனால் பக்காவாக பொருந்தி இருக்கிறது.. எப்போதும் இறுக்கமான முகத்துடனே படம் முழுவதும் காணப்படுகிறார்.. விமலின் கேரியரில் இந்த படம் நிச்சயம் இடம் பிடிக்கும்.
அதிலும் ஒரு படி மேலே சென்று தன் நடிப்பில் மிரள வைத்திருக்கிறார் கருணாஸ்.. விமலுக்கு உதவுவதற்காக இவர் செய்யும் செயல் உணர்வுபூர்வமான உத்தம கலைஞனை போற்றும் கேரக்டர்..
நாயகி மேரி ரிக்கெட்ஸ்க்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக நிறைமாத கர்ப்பிணியாக செய்திருக்கிறார்..
ஆடுகளம் நரேன், சார்லஸ் வினோத், பவன் தீபா சங்கர், அருள்தாஸ் உள்ளிட்ட அனைவரும் கதை ஓட்டத்திற்கும் கேரக்டருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் வலு சேர்த்து இருக்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் உருவான படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.
ரகுநந்தன் இசையில் பாடல்களும் வரிகளும் கவனிக்க வைக்கிறது.. அமரர் ஊர்தி பயணிக்கும் கதையில் அழகான இசையை கொடுத்து கதையுடன் ஒன்ற வைக்கிறார்.. ஒளிப்பதிவாளர் டெெமில் சேவியர் மதுரை திருநெல்வேலி சாலை பகுதிகளை அழகாக கேமராவில் படம் பிடித்து ரசிக்க வைத்திருக்கிறார்..
இயக்குனர் மைக்கேல் ராஜா சாலையில் செல்லும் பயணத்திற்கு போகும் இடம் வெகு தூரம் இல்லை என அழகான தமிழில் பெயர் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.. படத்தலைப்பும் திரைக்கதைக்கு ஏற்ப பொருந்தி இருப்பது சிறப்பு..
இடைவேளை வரை மெதுவாக செல்லும் திரைக்கதையில் கருணாஸ் என்ற சிறந்த கலைஞனைக் கொண்டு வந்து கதை ஓட்டத்தை சூடு பிடிக்க வைத்திருக்கிறார்.. முக்கியமாக கருணாஸ் தெருக்கூத்து கலைஞராக பேசும் வசனங்களை கிளைமாக்ஸ் காட்சியில் இணைத்து இருப்பது உணர்வுபூர்வமான ஒன்று.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரைக்கு வந்து நம்மை ஆச்சரியப்படுத்தும் படங்களின் வரிசையில் போகுமிடம் வெகு தூரம் இல்லை படம் நிச்சயம் இணையும்..